தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு கூட்டத்திலிருந்து வெளியேறிய சிவமோகன் ஆவேசம்

0 1

கட்சியிலிருந்து தலைவரை நீக்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது அதை நான் நேரடியாக பதிவு செய்து விட்டு கூட்டத்தில் இருந்து இன்று வெளிநடப்பு செய்துள்ளேன் என முன்னாள் வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக்கட்சியின் மத்திய குழு உறுப்பினருமான வைத்தியர் சி. சிவமோகன் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை வவுனியாவில் இன்று (28) இடம்பெற்ற மத்தியகுழு கூட்டத்தின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “எப்போதும் எமது கட்சி தீர்மானங்களை எடுக்கும்போது அனைவரையும் சாப்பாட்டுக்கு செல்லுமாறு தெரிவித்து விட்டு எடுப்பது வழமை.

இன்றும் அதே நிலைமை தான் இடம்பெற்றது, இவ்வாறு தான் தேர்தல் நியமனக்குழுவுக்கும் இடம் பெற்றிருந்தது. தற்போதைய செயலாளர் இருக்கும்போதுதான் இந்தக் கட்சியில் இவ்வாறான மோசமான செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது.

தலைவரை நீக்கும் அதிகாரம் இந்த மத்திய குழுவில் எவருக்குமே இல்லை அதனை நான் நேரடியாக மத்திய குழுவுக்கு தெரிவித்து விட்டு கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்திருக்கிறேன்.

என்னுடைய நோக்கம் இந்த கட்சியை சீராக்குவது தான், வழக்குகளை பின்வாங்குவதாக சுமந்திரன் வாக்குறுதி வழங்கி இருக்கின்றார்.

அவரால் சாட்டப்பட்டவர்கள் தான் இந்த வழக்குகளை போட்டார்கள் என்பதற்கு இது ஒரு சாட்சி ஆகவே அவரும் அந்த வழக்குகளை பின் வாங்கினால் நானும் எனது வழக்குகளை பின்வாங்கி பொதுச் சபை கூட்டத்திற்கு செல்வதற்கு தயாராக தான் இருக்கிறேன்.

தலைவரை தலைவர் பதவியில் இருந்து நீக்கவே முடியாது நாங்கள் கேட்டுக் கொண்டது தலைவர் தலைவராகவே இருக்க பதில் தலைவர் கூட்டங்களை நடத்துமாறு தான் கூறியிருந்தோம்.

ஆனால், அவர்கள் மாறுபட்ட செய்தியை வெளியிடுகிறார்கள் அது அவர்கள் வெளியிட்டது செய்தி அல்ல தலைவர் தலைவராகவே இருப்பார்” என அவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.