நாட்டை கவிழ்த்திய கோட்டாவின் ஆட்சி: நினைவு கொள்ளுமாறு அநுர அரசுக்கு சஜித் தரப்பு வலியுறுத்து!

0 1

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சி காலங்களை நினைவில் கொண்டு புதிய அரசாங்கம் செயற்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்தில் (26) இடம்பெற்ற கலந்துரையாடலொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “அரசாங்கம் என்ன செய்து கொண்டிருக்கின்றது என்பதை பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கி மக்களுக்கு பட்டினியில் இருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. அரிசி தட்டுப்பாட்டுக்கு இன்னும் தீர்வு வழங்கப்படவில்லை.

ஏற்கனவே சீரற்ற காலநிலையால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இனிவரும் போகங்களுக்கான உரத்தை வழங்குவதற்கும் அரசாங்கம் முறையான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவில்லை.

விவசாயிகள், நுகர்வோர் என சகலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கூடாத காலம் உரத்தட்டுப்பாடு விதிக்கப்பட்டதிலிருந்தே ஆரம்பமானது.

அதனை இந்த அரசாங்கம் நினைவில் கொள்ள வேண்டும். மறுபுறம் ஆசிரியர்களுக்கு மேலதிக வகுப்பு நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் எதிர்பார்த்த மாற்றம் இவையா? இன்று தேசிய மக்கள் சக்தியும் மக்கள் விடுதலை முன்னணியும் இரண்டாகப் பிளவடைந்துள்ளன.

கல்வி அமைச்சராக பிரதமர் ஹரிணி அமரசூரிய எடுத்த தீர்மானத்தைக் கூட நடைமுறைப்படுத்த முடியாத நிலைமையே காணப்படுகிறது.

மேலதிக வகுப்புக்களை நடத்துவதற்கு தடை விதிப்பதற்கு அவரால் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு எதிராக மஹிந்த ஜயசிங்க கருத்து வெளியிட்டுள்ளார்.

தற்போது இது குறித்த சுற்று நிரூபமும் மீளப் பெறப்பட்டுள்ளது. இவ்வாறு பயணித்தால் இந்த அரசாங்கத்தால் ஆட்சியைக் கொண்டு செல்ல முடியாது.

பொறுப்புள்ள எதிர்க்கட்சி என்ற ரீதியில் அரசாங்கத்தின் குறைகளை பகிரங்கமாக சுட்டிக்காட்டுவோம். அந்த வகையிலேயே தகுதியற்ற சபாநாயகர் பதவி விலகுவதற்கான உண்மைகளையும் நாட்டுக்கு வெளிப்படுத்தினோம்.

இவர்கள் மக்களை ஏமாற்றிய ஆட்சியைக் கைப்பற்றியவர்களாவர். மிகக் குறுகிய காலத்துக்குள் மக்களின் அதிருப்தியை பெற்றுக் கொண்ட அரசாங்கத்தை இதற்கு முன்னர் நாம் பார்க்கவில்லை. எதிர்காலம் எவ்வாறு தீர்மானிக்கப்படும் என்பது எமக்கு தெரியாது ” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.