உள்ளூராட்சி மற்றும் மாகாண சபை தேர்தல்களில் தேசிய மக்கள் சக்தியாகவே (NPP) போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நிஹால் அபேசிங்க (Nihal Abeysinghe) தெரிவித்தார்.
2025ஆம் ஆண்டு உள்ளூராட்சி மற்றும் மாகாண சபை தேர்தல்களை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்ற நிலையில் அதனை தேசிய மக்கள் சக்தி எவ்வாறு எதிர்கொள்ளவுள்ளது என்பது தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”எமது அணியில் உள்ள பங்காளிகளுடன் இணைந்து தேசிய மக்கள் சக்தியாகவே உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகளுக்கான தேர்தல்களில் போட்டியிடுவோம்.
பாரம்பரிய அரசியல் முறைக்கு மாற்றாக இடதுசாரிக் கட்சிகளின் கூட்டணியாகவே தேசிய மக்கள் சக்தி உருவாக்கப்பட்டது.
2024 ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்ற பிறகு தற்போது ஆளும் கட்சியாக மாறியுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார (Anura Kumara Dissanayake) தலைமையில் கட்சி தொடர்ந்தும் முன்னோக்கிப் பயணிக்கிறது.
அத்துடன், பொதுமக்கள் எமக்கு ஆணையை வழங்கியுள்ள நிலையில் தொடர்ந்தும் ஏனைய தேர்தல்களிலும் நாம் தேசிய மக்கள் சக்தியாகவே களமிறங்குவதற்குத் தீர்மானித்துள்ளோம்” என தெரிவித்தார்.