வவுனியாவில் உணர்வெழுச்சியடன் அனுஷ்டிக்கப்பட்ட சுனாமி நினைவு தினம்

0 1

சுனாமி பேரலையில் உயிர் நீத்தவர்களின் 20ஆம் ஆண்டு அஞ்சலி நிகழ்வு வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத் சந்திர தலைமையில் இன்று (26) இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது உயிரிழந்தவர்களிற்கு காலை 9.25 – 9.27 வரை இரண்டு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன், இந்து, பௌத்த, கிறிஸ்தவ மதத்தலைவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனைகளுடன் உயிரிழந்தவர்களுக்கு தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

அத்துடன் சுனாமி பேரவலம் தொடர்பாகவும் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பாகவும் அரச அதிபரின் கருத்துரையும் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் திணைக்கள தலைவர்கள், அரச அதிகாரிகள், அரச உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற சுனாமி ஆழிப்பேரலையில் உயிர் நீத்தவர்களிற்கான 20ஆம் ஆண்டு அஞ்சலி நிகழ்வு வவுனியாவில் இடம்பெற்றது.

வவுனியா – பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயம் மற்றும் வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் இன்று (26) குறித்த நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது.

பூந்தோட்டம் லயன்ஸ் விளையாட்டுகழக மைதானத்தில் அமைந்துள்ள சுனாமி நினைவு தூபியில் குறித்த பிரார்த்தனை நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

இதன்போது உயிரிழந்தவர்களிற்கு இரண்டு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன், நினைவு தூபிக்கு மலர்மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

நரசிங்கர் ஆலயத்தின் தலைவர் கோ.சிறிஸ்கந்தராஜா, தலைமையில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில் பிரதிஅமைச்சர் உபாலி சமரசிங்க (Upali Samarasinghe), நாடாளுமன்ற உறுப்பினர்கள் ம.ஜெகதீஸ்வரன், செ. திலகநாதன், முத்து முகமது (Muthu Mohammed)மற்றும் இந்து, பௌத்த மதகுருமார்கள், பொது அமைப்புகள், கிராம மக்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

குறித்த நினைவு தூபியானது சுனாமி பேரலை ஏற்பட்டு 31ஆம் நாளில் நரசிங்கர் ஆலய நிர்வாகத்தினரால் அமைக்கப்பட்டிருந்ததுடன், இலங்கையில் முதலாவதாக அமைக்கப்பட்ட தூபியாகும். இது தற்போது நகரசபையால் புணர்நிர்மானம் செய்யப்பட்டு பராமரிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.