முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு! ஏனைய சலுகைகள் தொடர்பில் அரசாங்கம் எடுக்கவுள்ள தீர்மானம்

6

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னரே பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த இராணுவத்தினர் சேவையில் இருந்து மீள அழைக்கப்பட்டுள்ளனர் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல(Sunil Watagala) தெரிவித்துள்ளார்.

ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பாதுகாப்பு விடயங்கள் மீள் பரிசீலனை செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு சேவையில் இருந்து இராணுவத்தினர் மீள அழைக்கப்பட்டு பொலிஸார் மாத்திரம் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் ஊடகம் ஒன்றிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

அரசியல் பழிவாங்கலுக்காக முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு குறைக்கப்பட்டது என்று குறிப்பிடுவது அடிப்படையற்றது. முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னரே பாதுகாப்பு பணியில் இருந்த  இராணுவத்தினர் சேவையில் இருந்து மீள அழைக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு பலவீனப்படுத்தப்பட்டுள்ளது என அரசியல் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் தரப்பினர் முறையான காரணிகளைக் குறிப்பிட வேண்டும்.

ஒட்டுமொத்த மக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு மற்றும் இதர சலுகைகள் குறித்து எதிர்வரும் வாரமளவில் உறுதியான தீர்மானம் எடுக்கப்படும்.

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம் ஆறு மாத காலத்திற்கு ஒருமுறை மீள் பரிசீலனை செய்யப்படும். முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்குப் போதுமான அளவில் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.