அமெரிக்க (America) அதிபர் பைடனின் மகன் ஹண்டர் பைடன் சட்ட விரோதமாகத் துப்பாக்கி ஒன்றை கொள்வனவு செய்தமை தொடர்பாகத் தொடரப்பட்ட மூன்று வழக்குகளிலும் குற்றவாளி என்று அந்த நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஹண்டர் பைடன் (Hunter Biden) தனக்கு போதைப்பொருள் பயன்படுத்தும் பழக்கம் உள்ளதை மறைத்து 2018 ஆம் ஆண்டு கைத்துப்பாக்கி ஒன்றை சட்டவிரோதமாக வாங்கியமைக்காக நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றறு வந்த நிலையில் அவரை குற்றவாளியாக அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இது குறித்து மேலும் தெரிய வருகையில்,
அமெரிக்காவைப் பொறுத்தவரைத் துப்பாக்கிகளை கொள்வனவு செய்ய கட்டுப்பாடுகள் இல்லை. 18 வயதைக் கடந்தவர்கள் அனைவரும் சட்டப்பூர்வமாகவே துப்பாக்கிகளை கொள்வனவு செய்யலாம். இதன்போது ஒரு விண்ணப்பத்தை மட்டும் அவர்கள் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.
அந்தவகையில், ஹண்டர் பைடன் கைத்துப்பாக்கி கொள்வனவு செய்வதற்காக கொடுத்த விண்ணப்பத்தில் போதைப்பொருள் பயன்பாடு குறித்த கேள்விக்கு அவர் போதைப்பொருள் எதையும் பயன்படுத்தவில்லை என்று பதிலளித்துள்ளார்.
இருப்பினும், ஹண்டர் பைடன் அப்போது போதைப்பொருளைப் பயன்படுத்தி இருந்தார் எனவும் மேலும் துப்பாக்கியை அவர் சுமார் 11 நாட்கள் தன்வசம் வைத்து இருந்ததாகச் சொல்லப்படுகின்றது.
இதனடிப்படையில், சட்டவிரோதமாக துப்பாக்கி வாங்கிய குற்றச்சாட்டுகளில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மகன் ஹண்டர் பைடன் குற்றவாளி என கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
இந்தநிலையில் போதைப்பொருள் பயன்பாடு தொடர்பாக அமெரிக்க அரசிடம் பொய் கூறியது, போதைப் பொருள் பயன்படுத்தும் போது துப்பாக்கியை வைத்திருந்தது உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டிருந்தன.
இந்த மூன்று குற்றச்சாட்டுக்களிலும் அவர் குற்றவாளி என்று அந்த நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனையடுத்து முதல் இரண்டு வழக்குகளில் தலா 10 ஆண்டுகள், மூன்றாவது வழக்கில் 5 ஆண்டுகள் என அதிகபட்சம் 25 ஆண்டுகள் வரை அவருக்குத் தண்டனை வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது
மேலும், அமெரிக்க அதிபரின் மகன் ஒருவன் குற்ற வழக்கில் தண்டிக்கப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.