யாழ்ப்பாணத்தில்(Jaffna) வங்கி அலுவலகர் என்ற போர்வையில் கொள்ளை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கொள்ளைச் சம்பவம் நேற்று முன்தினம்(14.12.2024) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர் காவல்துறையிடம் முறையிட சென்ற போதிலும் காவல்துறையினர் அவரின் முறைப்பாட்டினை பெற்றுக்கொள்ளாது அலைக்கழித்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, “காரைநகர் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு நேற்று முன்தினம்(14) தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட ஒருவர், தன்னை வங்கி ஒன்றின் மானிப்பாய் கிளையில் இருந்து கதைப்பதாக அறிமுகம் செய்து , உங்கள் வங்கி கணக்கு செயலிழந்து விட்டது, அதனை மீள செயற்படுத்த, அடையாள அட்டை இலக்கத்தை கூறுமாறு கேட்டுள்ளார். அதனால் அவரும் அடையாள அட்டை இலக்கத்தை கூறியுள்ளார்.
சில மணி நேரத்தில் அவரது மனைவிக்கு தொலைபேசி அழைப்பை எடுத்தவர்கள், கணவரின் வங்கி கணக்கு இலக்கத்தை கூறுமாறு கோரியுள்ளனர். அவரும் வங்கி கணக்கு இலக்கத்தை கூறியுள்ளார்.
அதன் பின்னர், அவரது கணக்கில் இருந்து 05 தடவைகள் 40 ஆயிரம் ரூபாயும், அதன் பின்னர் 20 ஆயிரம் ரூபாய், 06 ஆயிரம் ரூபாய் என 2 இலட்சத்து 26 ஆயிரம் ரூபாய் பணத்தை பெறப்பட்டுள்ளது.
தனது கணக்கு இலக்கத்தில் இருந்து பணம் பெறப்பட்டமை தொடர்பில் தொலைபேசிக்கு குறுந்தகவல் வந்ததை அடுத்து, வங்கிக்கு நேரில் சென்று வங்கி முகாமையாளரிடம் கேட்ட போது, காவல்துறையில் முறைப்பாடு செய்யுமாறு வங்கி அலுவலகர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டதால், யாழ்ப்பாண தலைமையக காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்ய சென்ற போது, அதனை உங்கள் பிரிவு காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறு கூறியுள்ளனர்.
அதனால் அவர் ஊர்காவற்துறை காவல்துறை நிலையம் சென்ற போது, வங்கி மானிப்பாய் பகுதி என்பதால், மானிப்பாய் காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்யுங்கள் என கூறியுள்ளனர்.
இதையடுத்து மானிப்பாய் காவல்துறை நிலையம் சென்ற போது, வங்கி கிளை அமைந்துள்ள பகுதி வட்டுக்கோட்டை காவல்துறை பிரிவுக்குள் வருகிறது. வட்டுக்கோட்டை காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்யுங்கள் என கூறியுள்ளனர்.
அதன்பின், வட்டுக்கோட்டை காவல்துறை நிலையம் சென்ற போது, முறைப்பாட்டை எழுத தமிழ் காவல்துறை உத்தியோகஸ்தர் இல்லை. பிறகு வருமாறு கூறி அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில், காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்வதற்காக பாதிக்கப்பட்டவர் சுமார் 150 கிலோ மீற்றர் தூரத்திற்கு மேல் அலைக்கழிக்கப்பட்டும் முறைப்பாட்டை எந்த காவல்துறை நிலையமும் ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.