கட்சியில் இருந்து எவரையும் நீக்கபோவதில்லை : சுமோவுக்கு பதிலடி கொடுத்த எம்பி

0 7

கடந்த தேர்தலில் கட்சியில் இருந்து விலகி செயற்பட்டவர்களை கட்சியில் இருந்து நீக்குவதாக ஏகமனதாக தீர்மானிக்கவில்லை அத்தோடு நானே தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் என தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் (Gnanamuththu Srinesan) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை வவுனியாவில் இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இன்றைய கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் பல விடயங்கள் இருந்தன ஆனாலும் ஒரு விடயம் ஆராயப்பட்டது.

தமிழரசுக் கட்சி தலைவரின் பதவி விலகல் கடிதம் தொடர்பாக வாதப்பிரதி வாதங்கள் இடம்பெற்றன.

அந்த கடிதத்தை மாவை சேனாதிராஜா அனுப்பியதன் பின்னர் பதவி விலகல் கடிதத்தில் இருந்து வாபஸ் பெறுவதாக சொல்லியிருந்தார். அத்தோடு மீண்டும் தலைவராக இருப்பதற்கான சம்மதத்தை தெரிவித்து இருந்தார்.

அது தொடர்பாக எமது கட்சி உறுப்பினர்கள் மத்தியில் இரண்டு கருத்துக்கள் இருந்தன. அதன் அடிப்படையில் அவர் பதவி வகிக்க வேண்டும் என்ற ஒரு கருத்தும், கடிதம் கொடுத்ததன் பிரகாரம் பதவியில் இருந்து விலக வேண்டும் என்ற ஒரு கருத்தும் இருந்தது.

ஒரு ஜனநாயக கட்சி என்ற அடிப்படையில் அந்த வாதப் பிரதி வாதங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றது. தீர்க்கமான முடிவு எடுக்க முடியாத நிலையில் இரு தரப்பு கருத்துக்களும் இருந்தன. ஜனநாயக ரீதியாக இதனை பார்க்க வேண்டியிருந்தது.

இதனால் பதவி விலகலை உடனடியாக ஏற்றுக் கொள்ளவில்லை. எதிர்வரும் 28 ஆம் திகதி வரை ஒத்தி வைத்து மீண்டும் கூட்டம் ஒன்றை கூட்டி தலைவர் யார் என்று முடிவெடுப்பதாக தீர்மானிக்கப்பட்டது. தேர்தலில ஏற்பட்ட பின்னடைவு குறித்தும் ஆராயப்பட்டது.

குறிப்பாக வடக்கு மாகாணத்தில் ஏற்பட்ட பின்னடைவு பற்றி பேசப்பட்டது. இதற்கு பதவி விலகல் ஒரு காரணம் சொல்லப்பட்டாலும் இன்னும் பல காரணங்கள இருந்தன.

அதனை சுயாதீனமான, நடு நிலமையான ஆய்வு குழு மூலம் ஆராய்ந்து அறிக்கைப்படுத்திய பின்னர் தான் கருத்து கூற முடியும் ஒவ்வொருவரது கருத்துகளும் சுயம் சார்ந்து இருக்கின்றன.

ஆய்வுக் குழு மூலம் அதனை மேறகொண்டால் அது பயன் உள்ளதாக அமையும், தமிழரசுக் கட்சி தலைவர் விடயம் முக்கியம் பெற்று இருந்தமையால் வேறு விடயங்கள் குறித்து பேச முடியாது போனது.

இதற்கு விரைவில் முடிவு எடுத்து விட்டு தமிழ் மக்களது பிரச்சனைகள் குறித்து பேச வேண்யுள்ளது. கடந்த தேர்தலில் கட்சிகளில் இருந்து விலகி தோதலில் போட்டியிட்டவர்களுககு என்ன நடவடிக்கை எடுப்பது என்ற ஒரு கருத்தும் பேசப்பட்டது.

சிலரது கருத்து அவர்களை கட்சி அங்கத்தவர் பட்டியலில் இருந்து நீக்கி விட வேண்டும் என்பது இருந்தாலும் அந்த கருத்து ஏகமனதான கருத்தாக இருக்கவில்லை.

அத்தோடு அதிருப்தியின் காரணமாக வெளியேறிச் சென்றவர்களும் இருக்கிறார்கள். அந்த அதிருப்திகளுக்கு என்ன காரணம் என்றும் ஆராய வேண்டியுள்ளது. ஆய்வு குழுவின் மூலம் முறையாக ஆய்வு செய்ய வேண்டும். அதன் பின் முடிவு எடுக்கப்படும்.

அத்துடன், நாடாளுமன்ற குழுவில் என்னை பேச்சாளராக அறிவித்துள்ளார்கள். அதனால் எமது கட்சியின் கருத்தியல் பற்றி நான் சொல்ல வேண்டியுள்ளது அதனை நான் செய்கின்றேன், கட்சி கூட்ட கருத்துக்களையும், நாடாளுமன்ற கருத்துக்களையும் வெளியிடுவது என்னுடைய பணியாக இருக்கும் ” என தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.