மீகொடை – நாகஹவத்தை பகுதியில் மகிழுந்தில் பயணித்த நபர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மீகொட – நாகஹவத்த பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன், நேற்றிரவு மூத்த சகோதரர் வீட்டுக்குச் சென்று, மீண்டும் மகிழுந்தில் வீடு திரும்பியுள்ளார்.
அதன்போது, வீதியோரம் மறைந்திருந்த இருவர், வாகனத்தை இடைமறித்துத் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு, தப்பியோடியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த நபர் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது, உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கு ரீ 56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் தெரியவராத நிலையில், சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை மீகொடை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.