தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கக்கூடியவாறான சமஷ்டி அரசியலமைப்பைக் கோருவதற்கும் தமிழ் மக்களுக்கு அவசியமான ஆதரவினை இந்தியா வழங்கவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam) தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் (Narendra Modi) வலியுறுத்தியுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (15) இந்தியா செல்லவுள்ள நிலையில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் (TNPF) நேற்று (14) இந்தியப் பிரதமருக்கு குறித்த கோரிக்கை கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, “நாடு சுதந்திரமடைந்ததன் பின்னரான வரலாற்றில், மிக முக்கியமானதொரு தருணத்தில் இலங்கை ஜனாதிபதியின் இந்திய விஜயம் இடம்பெறுகிறது.
கடந்த 75 வருட காலமாகப் பின்பற்றப்பட்டுவந்த கொள்கைகள் மற்றும் தீர்வு காணப்படாத இனப்பிரச்சினை என்பன பொருளாதார ரீதியில் மாத்திரமன்றி, அரசியல் ரீதியிலும் வங்குரோத்து நிலையடைந்த மட்டத்துக்கு இலங்கையைக் கொண்டுவந்து நிறுத்தியிருக்கின்றன.
எனவே நாட்டின் எதிர்காலம் சிறப்பாக இருக்கவேண்டுமாயின், எதிர்காலத்தை முன்னிறுத்திய கொள்கைகளும் முன்னரைக் காட்டிலும் மாறுபட்டவையாக இருக்கவேண்டும்.
குறிப்பாக அண்மையில் நாட்டுமக்களால் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்துக்கு வழங்கப்பட்ட ஆணையானது ‘முழுமையான கட்டமைப்பு மாற்றத்தைக்’ கோருவதாக அமைந்திருப்பதுடன், இதுவரை காலமும் பின்பற்றப்பட்டுவந்த நடைமுறைகள் இனிமேல் பொருந்ததாது என்பதையும் காண்பித்திருக்கிறது.
இந்த நிலையில் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு ஒற்றையாட்சி அரச கட்டமைப்பு பிரதான காரணமாகும். அரசியலமைப்புக்கான 13ஆம் திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, ஒற்றையாட்சி அரசின் கீழ் அர்த்தமுள்ள தீர்வையோ அல்லது சுயநிர்ணய உரிமையையோ பெற்றுக்கொள்வது சாத்தியமில்லை என்பதால், அத்திருத்தத்தை தமிழ் மக்கள் அடியோடு நிராகரித்து வந்திருக்கிறார்கள்.
13ஆம் திருத்தம் கொண்டுவரப்பட்டு 36 வருடங்கள் கடந்திருக்கும் நிலையில், அது அறிமுகப்படுத்தப்பட்டபோது இருந்ததை விட தற்போது நிலவரம் மிக மோசமடைந்துள்ளது.
தமிழ்த்தேசிய கோரிக்கைக்கான தீர்வாக அரசியலமைப்புக்கான 13ஆம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு இந்தியா கோருகிறது. ஆனால் அத்திருத்தத்தின் சரத்துக்களை நடைமுறைப்படுத்துமாறு கோரி நீதிமன்றங்களை நாடுகையில், அதன் தீர்ப்புக்கள் அத்திருத்தத்தின் நடைமுறைக்கு முரணானதாகவே இருக்கின்றன.
அதேபோன்று தமிழ் மக்கள் பேச்சுவார்த்தைகளுக்கான தொடக்கப்புள்ளியாக 13ஆம் திருத்தத்தைக் கருதுவதில் அரசியல் ரீதியான ஆபத்து இருக்கிறது. ஏனெனில் அவ்வாறு கருதுவது எமது நாட்டின் வரலாற்றில் முதற்தடவையாக தமிழ் மக்கள் ஒற்றையாட்சி அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்ற அர்த்தத்தை வழங்கும்.
எனவே 13ஆவது திருத்தத்தை ஏற்பதன் மூலம் தமிழர்கள் ஒற்றையாட்சி அரசியலமைப்பை அங்கீகரித்திருப்பதனால் இலங்கையில் இனப்பிரச்சினை இல்லை என்ற நிலைப்பாட்டுக்கு இலங்கை அரசு வரக்கூடும்.
ஆகையினாலேயே எமது கட்சி 13ஆம் திருத்தத்தைத் தொடக்கப்புள்ளியாகக்கூட ஏற்க மறுப்பதுடன், ஒற்றையாட்சிக் கட்டமைப்புக்கு அப்பால் செல்வதன் ஊடாகவே தீர்வை அடைந்துகொள்ளமுடியும் என்ற விடயத்தை சிங்களத் தலைமைகள் மக்களிடம் கூறவேண்டும் என வலியுறுத்துகிறோம்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது 2015 – 2019ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் தயாரிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு வரைவின் இடைக்கால முன்மொழிவுகளை பூரணப்படுத்துவதாக வாக்குறுதியளித்திருக்கிறது.
இருப்பினும் இந்த முன்மொழிவுகள் பொதுவில் ‘ஏக்கிய இராச்சிய’ முன்மொழிவு என அடையாளப்படுத்தப்படுவதுடன், அது ஒற்றையாட்சி அரசைக் குறிக்கிறது.
இவ்வாறானதொரு பின்னணியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் (Gotabaya Rajapaksa) ஆட்சிக்காலத்தில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தலைமையில் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவிடம் ஒருமித்த இலங்கைக்குள் சிங்கள மற்றும் தமிழ் தேசியத்தை அங்கீகரிக்கக்கூடியவாறான சமஷ்டி கட்டமைப்பு தொடர்பான எமது முன்மொழிவுகளை சமர்ப்பித்தோம்.
இலங்கை நெருக்கடிக்கு முகங்கொடுத்திருந்த வேளையில் உதவிக்கரம் நீட்டியதன் ஊடாக பெரும்பான்மையான சிங்கள மக்கள் மத்தியில் இந்தியா நன்மதிப்பைப் பெற்றிருக்கிறது.
எனவே ஒற்றையாட்சிக் கட்டமைப்புக்கு உட்பட்ட முன்மொழிவுகளை நிராகரிப்பதற்கும், அதற்குப்பதிலாக தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கக்கூடியவாறான சமஷ்டி அரசியலமைப்பைக் கோருவதற்கும் தமிழ் மக்களுக்கு அவசியமான ஆதரவினை இந்தியா வழங்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்“ என்று அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.