ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) 3 நாட்கள் உத்தியோகபூர்வ இந்திய (India) விஜயத்தின் போது முக்கிய இருதரப்பு பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன் பேச்சுவார்த்தைகளின் போது அவதானம் செலுத்தப்படும் விடயங்கள், எட்டப்படும் இணக்கப்பாடுகள் குறித்து டெல்லியிலிருந்து (Delhi) கூட்டு அறிவித்தல் வெளியிடப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
நேற்று10) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் ஜனாதிபதியின் இந்திய விவகாரம் தொடர்பில் கேள்வியெழுப்பிய போது, அமைச்சரவை பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ”ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 15ஆம் திகதி 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா செல்லவுள்ளார்.
அவருடன் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) மற்றும் பிரதி நிதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும (Harshana Suriyapperuma) உள்ளிட்டோரும் இந்த விஜயத்தில் பங்கேற்கவுள்ளனர்.
ஜனாதிபதி தலைமையிலான இந்த உயர்மட்ட தூதுக்குழு இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi), ஜனாதிபதி திரௌபதி முர்மு (Droupadi Murmu) உள்ளிட்ட முக்கிய இராஜதந்திரிகளை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளது.
எனினும் இதன் போது அவதானம் செலுத்தப்படவுள்ள விடயங்கள், கையெழுத்திடப்படவுள்ள ஒப்பந்தங்கள் குறித்து டில்லியிருந்து கூட்டு ஊடக அறிவித்தல் விடுக்கப்படும்.
விஜயத்துக்கு ஓரிரு தினங்களுக்கு முன்னர் வெளிநாட்டலுவல்கள் அமைச்சினால் உத்தியோகபூர்வ ஊடக அறிவித்தல் வெளியிடப்படும்“ என நலிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்தார்.