கடந்த அரசால் வழங்கப்பட்ட மதுபானசாலை அனுமதிப்பத்திரங்கள் எவையும் இரகசியமாகவோ அல்லது சட்டவிரோதமாகவோ வழங்கப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.
அரசின் வருமானத்தை அதிகரிப்பதற்காகவே அந்த அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன என முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
ரணிலின் ஆட்சிக்காலத்தில், நாடளாவிய ரீதியில் வழங்கப்பட்ட மதுபான அனுமதிப் பத்திரங்கள் தொடர்பான விவரங்கள் அநுர அரசால் நாடாளுமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை சமர்ப்பிக்கப்பட்டன.
இதையடுத்தே, சட்டவிரோதமாக இந்த அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்படவில்லை என்றும், ஒவ்வொரு அனுமதிப்பத்திரத்துக்கும் அரசு கட்டணத்தை அறவிட்டுள்ளது என்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கோ அல்லது வேறு எவருக்கோ இலஞ்சமாக மதுபான உரிமங்கள் வழங்கப்படவில்லை.
அவை சட்டரீதியாக அரசுக்கு வருமானம் ஈட்டுவதற்காக வழங்கப்பட்டவை. ஒவ்வொன்றும் 10, 15, 20 மில்லியன் ரூபாவுக்கு விற்கப்பட்டன.
நேரடி வரிகள் இல்லாமல் வருவாய் ஈட்டுவதற்கான வழிகள் இவை.
இந்த அனுமதிப்பத்திரங்களால் அரசின் வருமானம் நான்கு முதல் ஐந்து பில்லியன் ரூபா வரை அதிகரிக்கும்.
இன்னும் 300 உரிமங்களை வழங்கவிருந்தோம். அடுத்த ஆண்டு மேலும் 300 உரிமங்களை வழங்க ஏற்பாடு செய்திருந்தோம். கலால் வரி வருவாய் நாட்டின் பிரதான வருமான ஆதாரங்களில் ஒன்றாகும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.
Comments are closed.