அனைவரும் சமம் என கூறும் ஜே.வி.பியினருக்கு முடியுமாக இருந்தால், பௌத்த மதத்திற்கு கொடுக்கும் முன்னுரிமையை நாட்டிலுள்ள ஏனைய மதங்களுக்கும் கொடுத்துக்காட்டுங்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் (ஜனா) சவால் விடுத்துள்ளார்.
மட்டக்களப்பில்(Batticaloa) இன்றைய தினம்(02.12.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,“ புதிய அரசியலமைப்பை உருவாக்கி அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாமல் செய்து மாகாணசபை முறைமையை இல்லாதொழிப்பதற்கான திட்டங்களை வகுப்பதாக ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா ஊடகங்களில் கருத்து வெளியிட்டுள்ளார்.
அதுமட்டுமல்லாது, இலங்கை – இந்திய ஒப்பந்தம் என்பது இலங்கை மக்களின் விருப்பத்திற்கு மாறாக இந்தியாவால் திணிக்கப்பட்ட ஒன்று என்றும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு கூறும் ரில்வின் சில்வா ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த 13ஆவது திருத்தச் சட்டமானது 1987ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு ஆறில் ஐந்து பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்ட ஒரு விடயம்.
அவ்வாறிருக்கையில், அது இலங்கை மக்களின் விருப்பம் இல்லாமல் நிறைவேற்றப்பட்டது என எவ்வாறு கூற முடியும்.
இலங்கை – இந்திய ஒப்பந்தம் கொண்டு வரப்பட்டதில் இருந்து அதற்கு எதிராகப் போராடியவர்கள் ஜே.வி.பியினர் என்பது உண்மைதான். இதை மறந்து தற்போது எமது மக்கள் கனிசமாக ஜே.வி பியை ஆதரித்திருக்கின்றார்கள்.
எனினும், இந்த 13ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் எமது மக்கள் விரும்பியோ விரும்பாமலோ தேசிய அரசியலுக்குள் வந்திருப்பார்கள் என்பதையும் ரில்வின் சில்வா விளங்கிக்கொள்ள வேண்டும்.
கடந்த 1978ஆம் ஆண்டு புதிய அரசியலமைப்பு கொடுவரப்பட்டதில் இருந்து தற்போது வரை 22 திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், 13ஆவது திருத்தச் சட்டம் மாத்திரமே இன்னமும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாமல் இருக்கின்றது.
அத்துடன், 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக எதிர்த்து வந்த ஜே.வி.பியினரே 2006ஆண்டிலே இணைந்திருந்த வடக்கு – கிழக்கை பிரித்தும் வைத்தனர்.
நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல்களின் போது கூட ஜே.வி.பியினால் தமிழ் மக்களுக்கான தீர்வு தொடர்பில் எதுவும் குறிப்பிடவில்லை.
ஜே.வி.பியை பொறுத்த மட்டில் ஜனாதிபதி, அமைச்சர்களின் கருத்தை விட கட்சியின் செயலாளரின் கருத்தே முதன்மையாக இருக்கும். எனவே அவரின் கருத்தை தட்டிக் கழித்துவிட முடியாது.
13ஆவது திருத்தச் சட்டம் தமிழர்களுக்கு முழுமையான தீர்வு இல்லை என்பதே எங்கள் போன்ற தமிழ்த் தேசியக் கட்சிகளின் நிலைப்பாடகவும் இருக்கின்றது. ஆனால் தமிழர்களின் தீர்வு விடயத்தில் இது ஒரு முதற் புள்ளி என்பதே எங்களது கருத்து.
எனினும், இன்று 13ஆவது திருத்தம் தமிழர்களுக்கு தீர்வு இல்லை என்று கூறும் ஜே.வி.பி யினர் இதுவரையில் தமிழர்களின் பிரச்சினைக்கு இதுதான் தீர்வு என்று எதனையும் சொல்லுவதாக இல்லை.
இலங்கையில் அனைவரும் சமம், அனைவரும் சமத்துவமாக வாழ்வதற்கான ஒரு தீர்வினைக் கொண்டுவரப் போகின்றோம், 13ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிரானவர்கள், அதனை இல்லாமல் ஆக்கப் போகின்றோம் என்று சொல்லுபவர்கள் தமிழர்களின் புறையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு என்ன தீர்வினைத் தரப்போகின்றோம் என்பதையும் அவர்கள் கூற வேண்டும்.”என அவர் தெரிவித்துள்ளார்.
Comments are closed.