இலங்கையின் கிழக்குக் கடற்கரையை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்

6

வங்காள விரிகுடாவில் கடந்த 23ஆம் திகதி உருவாகிய காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளதாக யாழ்.பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் தலைவர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், “தாழமுக்கமானது முல்லைத்தீவிலிருந்து கிழக்கு வட கிழக்கு திசையில் 215 கி.மீ. தொலைவில் காணப்படுகின்றது.

இதன் நகரும் வேகம் மிக மிக குறைவாகவே உள்ளதுடன், இன்று காலையிலிருந்து மணிக்கு 3 கி.மீ. வேகத்தில் நகர்கிறது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வனிலை ரீதியாக தற்போது ஒரு வித அமைதி நிலவுகின்றது.

இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நகர்வு வேகத்தை கணக்கிட்டால் இந்த அமைதி நிலையற்றது.

குறிப்பாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று இடையிடையே சற்று கன மழை கிடைக்கும்.

இந்த மழை இடைவெளி பல இடங்களில் வெள்ள நீர் வடிந்து கடலைச் சென்றடைவதற்கு வாய்ப்பான காலமாகக் காணப்படும்.

ஆனால் நாளை (29) மற்றும் நாளை மறுதினமும் (30) வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

தற்போது வடக்கு மாகாணத்தில் காற்றின் வேகம் சற்று அதிகரித்துள்ளது. இது எதிர்வரும் 30ஆம் திகதி வரை தொடரும்.

இன்று காலை நிலவரப்படி பல குளங்களின் நீர் கொள்ளளவு மிக உச்ச நிலையை எட்டியுள்ளது.

எனவே அக்குளங்களின் கீழுள்ள மக்கள் அவதானமாக இருப்பது அவசியம்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.