மட்டக்களப்பு (Batticaloa) மாவட்டத்தில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த போதும் வெள்ள அனர்த்தத்தினை எதிர்கொள்வதற்குரிய ஆயத்தங்கள் திருப்தியளிக்கக்கூடிய வகையில் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மேலும், “மட்டக்களப்பு மாவட்டத்தில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனை நிவர்த்தி செய்யும் வகையில் கடற்படையினரால் தகுந்த ஏற்பாடுகள் முன்னரே மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.
சூறாவளிக்கான முன்னறிவிப்பு மூன்று நாட்களுக்கு முன்னரே விடுக்கப்பட்டிருந்த வேளையிலும் முன்னாயத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமையின் காரணத்தினால் மக்கள் மிகுந்த அசௌகரியங்களை சந்திக்க வேண்டிய அவல நிலை உருவாகியுள்ளது.
க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் படுவான்கரையிலுள்ள தமது இருப்பிடங்களுக்கு செல்ல முடியாது தவித்தவேளை எமது தலையீட்டினால் படகு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டதுடன் இலங்கை போக்குவரத்து சபையுடன் தொடர்பினை மேற்கொண்டு பேருந்து சேவைகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டன.
புதிய அரசாங்கத்தினுடைய அனுபவமற்ற தன்மை இங்கு உறுதியானது. மட்டக்களப்பு மாவட்டத்தில் முடிந்தளவு எம்மால் இயன்ற பணிகளை மேற்கொள்வோம்.
மேலும் வெள்ள நீர் மட்டம் அதிகரிக்கின்ற சந்தர்ப்பத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி மக்களுடன் மக்களாக நின்று மக்களுக்கான உதவிகளை மேற்கொள்வோம்” என குறிப்பிட்டுள்ளார்.
Comments are closed.