யாழில் இரு பாடசாலைகளை தற்காலிகமாக மூடுமாறு கோரிக்கை

5

சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணம் (Jaffna) கல்வி வலயத்தில் உள்ள இரண்டு பாடசாலைகளை தற்காலிகமாக மூடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், யாழ்ப்பாணம் கல்வி வலயத்தில் அமைந்துள்ள யாழ். ஒஸ்மானியா கல்லூரி மற்றும் யாழ். கதீஜா மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பு கருதி நாளையும் (27.11.2024) நாளை மறுதினமும் (28.11.2024) தற்காலிகமாக மூடுமாறு அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் யாழ். வலயக் கல்விப் பணிப்பாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மிகப் பலத்த மழைவீழ்ச்சியும் கடும் காற்றும் எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) தெரிவித்துள்ளது.

திணைக்களத்தினால் இன்று (26.11.2024) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த தாழமுக்கம் நவம்பர் 25ஆம் திகதி2330 மணியளவில் தென்கிழக்காக மட்டக்களப்பிலிருந்து ஏறத்தாழ 290 கிலோ மீற்றர் தூரத்திலும் திருகோணமலையிலிருந்து ஏறத்தாழ 410 கிலோ மீற்றர் தூரத்திலும் நிலை கொண்டிருந்தது.

இத் தொகுதி வடமேற்குத் திசையில் நகரக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் அடுத்த 12 மணித்தியாலங்களில் ஒரு ஆழமான தாழமுக்கமாக வலுவடைந்து நாட்டின் கிழக்குக் கரைக்கு மிக அண்மையாக நகரக் கூடிய சாத்தியம் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேற்குறிப்பிட்ட தொகுதியின் தாக்கம் காரணமாக, நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் சில இடங்களில் 150 மி.மீ க்கும் அதிகமான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு, வடமத்திய, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

பெய்துவரும் கனமழை காரணமாக மூதூர் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள தோப்பூர், பள்ளிக்குடியிருப்பு, மல்லிகைத்தீவு, பச்சநூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பல ஏக்கர் வயல் நிலங்கள் நீரில் மூழ்கி காணப்படுகின்றன.

மூதூர் – கட்டைபறிச்சான் இறால் பாலத்தை மேவி வெள்ளநீர் பாய்ந்து செல்கிறது. இதனால் இவ் வீதியூடாக பிரயாணம் செய்யும் பொதுமக்கள் அசௌகரியங்களுக்கு மத்தியில் பயணிப்பதை எம்மால் காணக் கூடியதாக உள்ளது.

அத்தோடு மூதூர் -அறபாநகர், பாலநகர் கிராமங்களிலுள்ள சில வீடுகளுக்குள் மழை நீர் உட்பகுந்துள்ளது.

அவர்கள் உறவினர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மூதூர் கடல் பிராந்தியத்தில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்த்து உள்ளனர்.

Comments are closed.