ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (anura kumara dissanayake) தலைமையில் 21 அமைச்சர்கள் பதவியேற்ற நிலையில் முஸ்லிம் சமுகத்தைச் சேர்ந்த எவருக்கும் அமைச்சுப் பதவி வழங்கப்படவில்லை என விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு (Colombo) மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிஸ்வி சாலிஹ் கடும் எதிர்ப்பை முன்வைத்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின், அமைச்சரவை ஒன்றை வழிநடத்துவதற்கான முதன்மை நிபந்தனை ஒருவரின் தகுதிகள், திறமைகள் மற்றும் அரசியல் புத்திசாலித்தனங்களே தவிர, அவர்களின் பாலினம், இனம் அல்லது மதம் அல்ல என ரிஸ்வி சாலிஹ் தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சரவையில் முஸ்லிம் பிரதிநிதிகள் இல்லை என்ற விமர்சனத்திற்கு பதிலளித்தபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சரியானவர்களை சரியான அமைச்சுகளுக்கு நியமித்துள்ளார் என்பதில் தனக்கு முழு நம்பிக்கை இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்
மதத்தின் அடிப்படையில் மட்டுமே அமைச்சரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் தேவையற்ற பிளவுகளை தூண்டி, நாடு முன்னேற வேண்டிய ஒற்றுமையை குழிபறிக்கும் அபாயத்தை ஏற்படுத்தும் என்றும் ரிஸ்வி சாலிஹ் சுட்டிக்காட்டியுள்ளார்.
மத, இன வேறுபாடுகள் இன்றி அனைவருக்கும் சிறந்த இலங்கையை கட்டியெழுப்புவதற்கான தொலைநோக்கு காரணமாகவே தேசிய மக்கள் சக்தி மக்கள் வாக்களித்தனர்.
எனவே, பிரிவினைவாத விவாதங்களால் திசை திருப்பப்படாமல் முடிவுகளை வழங்குவதற்கான பொறுப்பை, அரசாங்கத்திற்கு வழங்கவேண்டும்.
இந்தநிலையில், தற்போது நாட்டின் முன்னேற்றமே முக்கியம், தனிப்பட்டவர்களின் அடையாளங்கள் அல்ல என்றும் தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிஸ்வி சாலிஹ் தெரிவித்துள்ளார்.
Comments are closed.