என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ள நிராகரிக்கப்பட்ட வாக்குகள்

8

நடைபெற்று முடிவடைந்த பொதுத் தேர்தலில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான நிராகரிக்கப்பட்ட வாக்குகள் பதிவாகியுள்ளமை தேர்தல் ஆணையத்தின் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி தெரியவந்துள்ளது. இதன்படி 667,240 வாக்குகள் செல்லாதவையாக கணக்கிடப்பட்டுள்ளன. இது மொத்த வாக்குகளில் 5.65% ஆகும்.

தேர்தல் ஆணைய புள்ளிவிபரங்களின்படி, 2024 இல் நாடாளுமன்ற தேர்தலில் தகுதி பெற்ற 17,140,354 வாக்காளர்களில், 11,815,246 பேர் வாக்களிப்பில் ஈடுபட்டனர். இது 68.93% வாக்குவீதத்தை பிரதிபலிக்கிறது. இருப்பினும், நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் சதவீதம் 2020 பொதுத் தேர்தலில் 4.58% இல் இருந்து 2024 இல் 5.65% ஆக உயர்ந்துள்ளது.2024நாடாளுமன்ற தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் கூட நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் வீதம் கூடியுள்ளது.

ஒப்பீட்டளவில், 2024 ஜனாதிபதிதேர்தலில் 13,319,616 வாக்காளர்கள் வாக்களித்ததில் 79.46% அதிக வாக்குகள் பதிவாகியுள்ளன. இருப்பினும், நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் சதவீதம் 2.2% (300,300 வாக்குகள்) குறிப்பிடத்தக்க வகையில் குறைவாக இருந்தது. 2020 பொதுத் தேர்தலில் 12,343,302 வாக்காளர்கள் வாக்களித்ததில் 75.89% வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் 744,373 வாக்குகள் அதாவது 4.58% நிராகரிக்கப்பட்டன.

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் அதிகரிப்பதற்கு வாக்களிக்கும் முறை குறித்த குழப்பம், முறையற்ற வாக்குச் சீட்டு குறியிடல் மற்றும் சில சமயங்களில் எதிர்ப்பின் வடிவமாக வாக்குகளை வேண்டுமென்றே செல்லாததாக்குவது உள்ளிட்ட பல காரணிகள் அடங்குவதாக தேர்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

ஞாயிறு காலை பேசிய தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க, நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் பின்னணியில் உள்ள காரணங்களை முழுமையாக ஆராய ஆணைக்குழுவுக்கு இன்னும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதை ஒப்புக்கொண்டார்.

“தேர்தல் முடிந்து இரண்டு நாட்கள் மட்டுமே ஆகியுள்ளன, நாங்கள் இன்னும் தரவுகளைச் சேகரித்து விரிவான மதிப்பீட்டை நடத்துகிறோம். நிராகரிக்கப்பட்ட வாக்குகள் அதிகரிப்பதற்கான அடிப்படைக் காரணங்களை உரிய நேரத்தில் ஆராய்வோம்” என்று அவர் விளக்கினார்.

போதிய வாக்காளர் கல்வியறிவின்மை செல்லுபடியற்ற வாக்குச் சீட்டுகள் அதிகரிப்பதற்கு பங்களித்திருக்குமா என வினவியபோது, பொதுமக்களை அறிவூட்டுவதற்கு ஊடகங்கள் ஊடாக ஒருங்கிணைந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக ரத்நாயக்க வலியுறுத்தினார்.

“பல்வேறு ஊடக நிறுவனங்கள் வாக்களிக்கும் செயல்முறையைப் பற்றி வாக்காளர்களுக்குத் தெரிவிக்கும் வகையில் வாக்காளர் கல்வித் திட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. நிலைமை உன்னிப்பாக ஆராயப்படும் அதே வேளையில், இந்த தொடர்ச்சியான முயற்சிகளை அங்கீகரிப்பது முக்கியம், ”என்று அவர் கூறினார்

Comments are closed.