தமிழரசுக் கட்சிக்கு வட கிழக்கு மக்கள் வழங்கிய ஆணை – எக்காளமிடும் சுமந்திரன்

7

தமிழரசுக் கட்சிக்கு வடக்கு – கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் பிரதான ஆணையைக் கொடுத்திருக்கின்றார்கள்  இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் (MA Sumanthiran) தெரிவித்துள்ளார்.

மக்கள் முன்பாக வந்து தேர்தலில் போட்டியிட்டு மக்களால் நான் தெரிவு செய்யப்படாத சூழலில் தேசியப் பட்டியல் மூலமாக நாடாளுமன்றம் செல்வதை விரும்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

யாழ். (Jaffna) ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது, கட்சி தாவல்கள் நிறைந்த எங்களுடைய அரசியல் கலாசாரத்திலே தேசிய மக்கள் சக்தி தெட்டத் தெளிவாக வேற கட்சிகளில் இருந்து தங்களுடைய கட்சிக்கு யாரும் வர வேண்டாம் என்றும், தாங்கள் யாரையும் எடுக்க மாட்டோம் என்றும் சொல்லி தனித்து இந்த வெற்றியை ஈட்டியிருக்கின்றார்கள்.

ஜனாதிபதித் தேர்தலில் அநுரகுமார திஸாநாயக்க வெற்றி பெற்றதே வியப்பான விடயமாகப் பலராலும் நோக்கப்பட்டது.

அதற்கு ஒருபடி மேலே சென்று இப்போது நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் அப்பால் மிகப் பெரியதொரு பெரும்பான்மையை அவர்கள் பெற்றிருக்கின்றார்கள்.

இந்த இடத்திலே தேசிய மக்கள் சக்தி தங்களுடைய தேர்தல் விஞ்ஞாபனத்திலே மக்களுக்குச் சொன்ன விடயங்களை நாங்கள் ஞாபகப்படுத்த விரும்புகின்றோம்.

இப்படியாக மக்கள் ஆணை உங்களுக்குக் கொடுக்கப்பட்டு இருப்பது முக்கியமாக தேர்தல் அறிக்கை விஞ்ஞாபனத்திலே தாங்கள் குறிப்பிட்ட வாக்குறுதிகளுக்காகவேதான். ஆகையினால் அதைச் செய்து நிறைவேற்றும்படியாக இந்த ஆணை கொடுக்கப்பட்டும் இருக்கின்றது.

இந்தத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி தனித்துப் போட்டியிட்டது எல்லோருக்கும் தெரியும்.

தமிழரசுக் கட்சியோடு இணைந்து வெவ்வேறு கட்சிகள் கூட்டுச் சேர்வதும் பின்னர் விலகிச் செல்வதும் வழக்கமாக இருந்திருக்கின்றது.

இந்தத் தேர்தலுக்கு முன்னர் எங்களோடு கூட்டுச் சேர்ந்திருந்த பங்காளிக் கட்சிகளான ரெலோவும் புளொட்டும் விலகி புதிதாக ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி என்று குத்துவிளக்குச் சின்னத்திலே அவர்கள் பயணித்தார்கள்.

இதற்குப் பின்னர் இப்போது இதனைச் சங்கு சின்னமாகா மாற்றியிருக்கின்றார்கள்.

ஆகையினால் தமிழரசுக் கட்சி தனித்து மக்கள் முன்பாக ஆணைக்காகச் செல்லுகின்றபோது பலருடைய விமர்சனங்கள் இருந்தன.

அதாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடைந்து விட்டது, தமிழரசுக் கட்சி சின்னாபின்னமாகி விட்டது, சுக்குநூறாகி விட்டது என்றவாறாக இந்தத் தேர்தல் காலத்தில் கூட சொல்லப்பட்டது.

எங்களுடைய கட்சியில் இருந்தும் சிலர் விலகிச் சென்று வேறு கட்சிகளிலும், சுயேச்சைக் குழுக்களிலும் போட்டியிட்டிருக்கின்றார்கள். ஆனால், இந்தத் தேர்தல் முடிவு எங்களுடைய கட்சிக்குப் பலமான மக்கள் ஆணையைக் கொடுத்திருக்கின்றது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பத்து ஆசனங்கள் இருந்த போதிலும் தமிழரசுக் கட்சிக்கு ஆறு ஆசனங்கள்தான் அதில் இருந்தன.

இப்போது தனித்துப் போட்டியிடுகின்ற போது எங்களுக்கு எட்டு ஆசனங்கள் கிடைத்திருக்கின்றன. எங்களை விட்டு விலகி தனித்துச் சென்றவர்களுக்கு எந்தவிதமான ஆணையையும் கொடுக்காமல் தமிழரசுக் கட்சிக்கு வடக்கு – கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் பிரதான ஆணையைக் கொடுத்திருக்கின்றார்கள்.

அதற்காகத் தமிழரசுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கின்றோம். இந்தத் தேர்தல் பரப்புரை காலத்திலே நாங்கள் தெளிவாக ஒரு விடயத்தைச் சுட்டிக்காட்டியிருந்தோம்.

அதாவது இணைந்த வடக்கு – கிழக்கு எங்களது தாயகம், அதிலே எங்களுக்கு சுயநிர்ணய உரித்து உண்டு. நாங்கள் ஒரு மக்களாக – ஒரு தேசமாக அதிலே வாழுகின்றோம் என்பதை உறுதி செய்வதற்காக வடக்கு – கிழக்கு முழுவதும் ஒரு கட்சிப் பிரதிநிதிகளை அனுப்ப வேண்டும் எனக் கேட்டிருந்தோம்.

அதுவும் தமிழரசுக் கட்சி தவிர்ந்த வேறு எந்தக் கட்சிகளுக்கும் அந்த ஆற்றல் இல்லை என்று மக்களுக்கு நாங்கள் தெளிவாகச் சொல்லியிருந்தோம். இன்று வெளியாகி இருக்கின்ற தேர்தல் முடிவுகளிலே அது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய தேர்தல் மாவட்டங்களில் இருந்தும் மக்கள், எமது கட்சி பிரதிநிதிகளைத் தெரிவு செய்துள்ளனர்.

இதில் மட்டக்களப்பில் விசேடமாக மூன்று ஆசனங்களைப் பெற்றுள்ளோம். இதேநேரம் வேறு இடங்களிலும் ஒவ்வொரு ஆசனங்களைப் பெற்றுள்ளோம்.

இது எங்களது கட்சிக்குத் தோல்வி என்பதை ஒப்புக்கொள்கின்றோம். இதில் மிக விசேடமாக யாழ்ப்பாணம் ஒரேயொரு ஆசனத்தைப் பெற்றிருக்கின்றோம். என்னைப் பொறுத்தவரையில் தனிப்பட்ட ரீதியிலும், கடந்த 14 வருடங்கள் நாடாளுமன்றத்திலும் சேவை செய்த நான் இந்த முறை மக்களால் தெரிவு செய்யப்படவில்லை.

மக்களுடைய தெரிவை நான் மதிக்கின்றேன், ஏற்றுக்கொள்கின்றேன். இத்தனை காலமாக எனக்கு எல்லா விதங்களிலும் உறுதுணையாக உதவி செய்து வந்த அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

தமிழரசுக் கட்சிக்கான தேசியப் பட்டியல் ஆசனம் தொடர்பில் தமிழரசின் மத்திய செயற்குழு கூடி முடிவு எடுக்கப்படும். அவ்வாறான சகல முடிவுகளும் எப்போதும் கட்சி முடிவாகவே எடுக்கப்படும். ஆகவே, கட்சி என்ன தீர்மானம் எடுக்கும் என்று நான் முன்கூட்டியே சொல்லல முடியாது.

எங்களது கட்சியைப் பொறுத்த வரையில் கட்சியின் முடிவே இறுதியாக இருக்கும். நான் கட்சியின் சகல முடிவுகளுக்கும் கட்டுப்பட்டவனாக இருப்பேன்.

சிறீதரன் மிகப் பெரிய வெற்றி பெற்றிருக்கின்றார். அதிகளவான விருப்பு வாக்குகளையும் பெற்றுள்ளார். அவர் உட்பட தமிழரசுக் கட்சியில் இம்முறை வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள். அவர்களுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்.” – என்றார்.

Comments are closed.