கொழும்பிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 11வது மாடியில் இருந்து விழுந்து நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மனைவியின் பிரசவத்தின் போது தனது முதல் குழந்தை உயிரிழந்தை அடுத்து ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக அவர் விபரீத முடிவை எடுத்து உயிரை மாய்த்துள்ளார்.
அடுக்குமாடி குடியிருப்பின் 11வது மாடியில் உள்ள வீடொன்றில் வசித்து வந்த 29 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவரது மனைவி நேற்று முன்தினம் பிரசவத்திற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், முதல் குழந்தை பிரசவத்தின் போது உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குழந்தை இறந்த பிறகு, அவர் மனரீதியாக பாதிக்கப்பட்டிருந்தார் எனவும், குடியிருப்பாளர்களிடம் பேசாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
உயிரிழந்த குழந்தை நேற்று மாதம்பிட்டிய பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. பின்னர் குறித்த நபர் குடியிருப்பில் வந்து தனியாக இருந்தார்.
சத்தம் ஏதும் வராததால் குடியிருப்பாளர்கள் தேடியபோது அவர் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து விழுந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த நபரின் மனைவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. உயிரிழந்தவரின் சடலம் தொடர்பான நீதவான் விசாரணை இன்று இடம்பெறவுள்ளது.
Comments are closed.