முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி குறித்து விளக்கமளித்துள்ள அரசாங்கம்

7

சகல பொலிஸ் அதிகாரிகளுக்கும் மருந்து வழங்குவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியை விட முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி அதிகம் என்று அமைச்சரவை ஊடகப் பேச்சாளர், அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (06) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நூற்றுக்கும் அதிகமான பொலிஸ் மற்றும் படை அதிகாரிகள் அதற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் சில ஜனாதிபதிகளுக்கு 180 வரையான பாதுகாப்பு அதிகாரிகள் கடமையாற்றுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

பாதுகாப்பு அதிகாரிகள் மாத்திரமன்றி பாதுகாப்பு வாகனங்கள், பஸ், டிபன்டர் ரக வாகனங்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள், அம்பியூலன்ஸ் வண்டி என சகலதும் வழங்கப்பட்டுள்ளதுடன் சராசரியாக பொலிஸ் பாதுகாப்பு வழங்குதல் மற்றும் ஏனைய பராமரிப்பு செயற்பாடுகளுக்காக 1100 மில்லியன் ரூபா வரை செலவிடப்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது.

ஒரு வருடத்திற்கு செலவாகும் இந்த செலவு பொலிஸ் வைத்தியசாலையின் ஒரு வருடத்திற்கான செலவை விட அதிகம் என குறிப்பிட்ட அமைச்சர், இவ்வாறான செயற்பாடுகளை மாற்ற வேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ளளார்.

இதற்காக குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன், குழுவின் சிபாரிசுக்கு இணங்க எதிர்காலத்தில் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படும் என்றும், அந்த அமைச்சரவை பத்திரத்திற்கு இணங்க சகல முன்னாள் ஜனாதிபதிகளுக்குமான சலுகை முறைகள் மற்றும் பாதுகாப்புடன் தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் விசேட பாதுகாப்பு தேவைப்பாடு உள்ள முன்னாள் ஜனாதிபதிகளுக்காக விசேட பாதுகாப்பை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் விபரித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்கவுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு நீக்கப்படவில்லை என்றும், அவருக்கு ஏற்கனவே 57 பாதுகாப்பு அதிகாரிகள் காணப்படுவதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.

Comments are closed.