கண்டி- கல்தன்ன பிரதேசத்தில் உள்ள ஆலயமொன்றை நடத்தும் பூசகர் ஒருவரின் மகனுக்குச் சொந்தமான போலி இலக்கத் தகடு பொருத்தப்பட்ட சொகுசு ஜீப் வண்டியொன்றை தெல்தெனிய பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
திகன பிரதேசத்தில் சட்டவிரோத ஜீப் வண்டியொன்று இருப்பதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து, கடந்த 30ஆம் திகதி பொலிஸார் மேற்கொண்ட சோதனையின் போது குறித்த வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளது.
அங்கு, சந்தேகநபரிடம் உரிய ஆவணங்கள் இல்லை எனவும், இந்த வாகனத்தை பூசகரும் அவரது மகனும் பயன்படுத்தியதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதன்போது பூசகருக்கு சொந்தமான வாகன தரிப்பிடத்தில் காணப்பட்ட இடப்பற்றாக்குறை காரணமாக இந்த வாகனத்தை தனது மகனின் வீட்டிற்கு கொண்டு வந்ததாகவும் பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
மேலும், குறித்த வாகன தரிப்பிடத்தில் சட்டவிரோதமானவை என சந்தேகிக்கப்படும் வேறு வாகனங்கள் இருப்பதாக பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள இலக்கத்தகடு கண்டியில் உள்ள ஒருவருக்கு சொந்தமான வாகனத்திற்காக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் அலுவலகத்தினால் வழங்கப்பட்ட இலக்கம் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வாகனம் முன்னதாக சட்டவிரோத நடவடிக்கை ஒன்றின் காரணமாக பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டு நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், மற்றுமொரு சட்டவிரோத வாகன விடுவிப்புடன் பூசகர் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட வாகனமும் முன்னதாக விடுவிக்கப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதன்காரணமாக இதனுடன் தொடர்புடைய நீதிமன்ற நடவடிக்கை தொடர்பில் நீதிச்சேவை ஆணைக்குழுவில் பொலிஸார் முறைப்பாடு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் சட்ட ஆலோசனையின்படி, பூசகரும் அவரது மகனும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Comments are closed.