இலங்கையின் விண்ணப்பத்தை நிராகரித்த பிரிக்ஸ் அமைப்பு

7

பிரிக்ஸ் (BRICS) அமைப்பில் முழு உறுப்பினராக சேர்வதற்கான இலங்கையின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) தெரிவித்துள்ளார்.

அந்த அமைப்பின் உறுப்பு நாடுகளை ஒன்பது என்ற எண்ணிக்கையில் தக்கவைக்கும் முடிவைக் கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவரட குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், அமைப்பின் பங்காளி உறுப்பு நாடாக இணைவதற்கு இலங்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

அத்துடன், உறுப்பு நாடுகளுக்கு நிதி உதவி வழங்கும் பிரிக்ஸின் புதிய அபிவிருத்தி வங்கியில் இணைவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, புதிய அபிவிருத்தி வங்கியில் இணைவதற்கான யோசனைக்கு இலங்கையின் அமைச்சரவை விரைவில் அங்கீகாரம் வழங்கவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பிரிக்ஸ் (BRICS) என்பது உலகின் முன்னணியாக வளர்ந்து வரும் சந்தைப் பொருளாதாரங்களின் சக்திவாய்ந்த குழுவாகும்.

பிரேசில், ரஸ்யா, இந்தியா, சீனா, தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளை மையப்படுத்தி அமைக்கப்பட்டுள்ள இந்த அமைப்பு, குறித்த நாடுகளின் பெயர்களது முதல் எழுத்துக்களை கொண்டு பிரிக்ஸ் என்று அழைக்கப்படுகிறது.

எகிப்து, எத்தியோப்பியா, ஈரான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகியவை பிரிக்ஸ் உறுப்பு நாடுகளாகும்.

இந்தநிலையில், பிரிக்ஸ் அமைப்பின் தலைவராக அடுத்த ஆண்டு பிரேசில் பொறுப்பேற்கும். பிரிக்ஸின் 16ஆவது உச்சி மாநாடு, ரஸ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புடின் தலைமையில் ரஸ்யாவில் நடைபெற்றது.

Comments are closed.