இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளது.
பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 19 – 23ஆம் திகதிகளுக்கு இடையில் அறுகம்பே பகுதியில் தங்கியிருக்கும் இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்தும் திட்டம் உள்ளதாக, இந்திய உளவு அமைப்புகள், இலங்கைக்கு அறிவித்திருந்தன.
இலங்கையைச் சேர்ந்த இருவர் தாக்குதல் நடத்தத் தயாராக இருப்பதாகவும் அவர்களில் ஒருவர் ஈராக்கை சேர்ந்தவர் என்றும் புலனாய்வுப் பிரிவினர் சுட்டிக்காட்டியிருந்தனர்.
சர்வதேச போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் சில காலத்திற்கு முன்னர் கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒருவரே இந்தத் தாக்குதலின் பின்னணியில் இருந்தவர் என விசாரணைக் குழுக்கள் கண்டறிந்துள்ளன.
தாக்குதல் நடத்துவதற்காக சுமார் 50 லட்சம் ரூபா பணம் அவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், ஈரான் மற்றும் பாகிஸ்தான் நாட்டுப் பயங்கரவாத அமைப்புக்களுடன் தொடர்பைப் பேணிய குற்றச்சாட்டில் யாழ். சுன்னாகத்தில் 42 வயதுடைய தமிழர் ஒருவர் கடந்த 20 ஆம் திகதி அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரின் கைதை அடுத்தே அறுகம்பே தாக்குதல் தாயாரிப்புப் பற்றிய விவகாரம் அம்பலத்துக்கு வந்திருக்கலாம் என்று சில பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
யாழ். சுன்னாகத்தைச் சொந்த இடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட ஒருவர் 2016ஆம் ஆண்டு முதல் சில காலம் இலங்கைச் சிறையில் இருந்து பின்னர் விடுதலையாகியுள்ளார்.
சிறையில் இருந்த சமயம் பாகிஸ்தான் மற்றும் ஈரான் நாட்டுக் கைதிகளுடன் இவருக்கு நட்பு ரீதியான பழக்கம் ஏற்பட்டுள்ளது.
சிறையில் இருந்து விடுதலையானவர் பாகிஸ்தான் மற்றும் ஈரான் நாட்டவர்களுடன் கூட்டிணைந்து மீண்டும் ஒரு நாசகார செயலுக்குத் திட்டமிட்டார் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலேயே கடந்த 20 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணிக்குச் சுன்னாகத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பில் இருந்து வந்த பயங்கரவாதத் தடுப்புப் பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டவர் மேலதிக விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இலங்கையில் வெளிநாட்டவர்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த குற்றசாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையிலுள்ள யூதர்களை இலக்கு வைத்து, தாக்குதல் நடத்த திட்டமிட்ட இருவரை பயங்கரவாத விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய கிழக்கு நாட்டில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமை அடுத்து, பழிவாங்கும் நோக்கில் இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெறலாம் என எச்சரிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து நேற்றையதினம் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், நாடு முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்போது மேற்கொண்ட விசாரணைக்கு அமைய குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் விரிவான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Comments are closed.