2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் முறையான விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பொலிஸ் மா அதிபர் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அறிவித்துள்ளார்.
நேற்று (20) கட்டுநாயக்கவில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தி பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி, சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த போது தயாரிக்கப்பட்ட இரண்டு அறிக்கைகள் தொடர்பில் தனிநபர் ஒருவர் கோரிக்கை விடு;த்து வருவதை அவர் விமர்சித்துள்ளார்.
2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலை, அதிகாரத்தைப் பெறுவதற்காக பயன்படுத்தியவர்கள், ஐந்தாண்டுகளுக்குப் பிறகு இப்போது மீண்டும் வந்திருக்கிறார்கள்.
அந்த அறிக்கைகளை வெளியிட வேண்டும் என்று இப்போது அவர்கள் கோருகிறார்கள்.
எனினும் அந்த இரண்டு அறிக்கைகளும் ரணில் விக்ரமசிங்கவின் கீழ் செய்யப்பட்டவை. இரண்டுமே விசாரணைக் குழுக்களின் அறிக்கைகள் அல்ல என்று ஜனாதிபதி அநுரகுமார குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், தமது விசாரணை செயல்முறையைத் தடம் புரளச்செய்யும் எந்தவொரு முயற்சியையும் கண்டு அரசாங்கம் சளைக்காது. நியாயமான விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொணர அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது.
அதில் மறைப்பதற்கும், பாதுகாப்பதற்கும் எதுவும் இல்லையென்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதேவேளை குறித்த அறிக்கைகளை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெளியிடத் தவறினால், இன்று திங்கட்கிழமை குறித்த இரண்டு அறிக்கைகளையும் மக்களுக்கு வெளியிடப்போவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
Comments are closed.