இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட உலகளாவிய நெருக்கடிகளின் போது எடுக்கப்பட்ட விரைவான நடவடிக்கைகள் குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி தகவல்களை வெளியிட்டுள்ளார்.
புத்தரின் போதனைகள் மற்றும் பாலியை செம்மொழியாக இந்திய அரசு அங்கீகரித்ததை நினைவுகூரும் வகையில், புதுடில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடைபெற்ற சர்வதேச அபிதம்ம திவாஸ் விழாவில் உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
புத்தபெருமான் தனது சொற்பொழிவுகளை பாலி மொழியிலேயே ஆற்றியுள்ளார். இந்தநிலையில், இந்திய அரசு, பாலி மொழிக்கு செம்மொழி அந்தஸ்தை இந்த மாதத்தில் வழங்கியுள்ளதால், இந்த ஆண்டு அபிதம்மா திவாஸ் சிறப்பு வாய்ந்தது என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
பாலி மொழிக்கு செம்மொழியாக அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளமை, புத்தபெருமானின் மகத்தான பாரம்பரியம் மற்றும் பாரம்பரியத்துக்குக் கிடைத்த மரியாதை என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.
அமைதி மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துவதில் புத்தபெருமானின் போதனைகள் முக்கியமானவை என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதேவேளை, புத்தபெருமானின் கொள்கையின் அடிப்படையில், துருக்கியில் நிலநடுக்கம், இலங்கையின் பொருளாதார நெருக்கடி மற்றும் கொரோனா தொற்றுநோய் போன்ற உலகளாவிய அவசர நிலைகளின் போது இந்தியாவின் விரைவான நடவடிக்கைகளை அவர் எடுத்துரைத்துள்ளார்.
Comments are closed.