உக்ரைனுக்கு எதிரான போரில், ரஷ்யாவுடன் இணைந்து சண்டையிட வட கொரியா தமது படைகளை அனுப்பத் தொடங்கியுள்ளதாக தென் கொரியாவின் உளவு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், இது தீவிரமான பாதுகாப்பு அச்சுறுத்தல் என்று சியோல் எச்சரித்துள்ளது.
உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் 10,000 வடகொரிய படையினர், உக்ரைனுக்கு எதிரான போரில் இணையலாம் என நம்புவதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி அறிவித்த ஒருநாள் கழிந்த நிலையில் இந்த செய்தி வெளியாகியுள்ளது.
இந்த சூழ்நிலையில், தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோல் அவசர பபாதுகாப்பு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். சர்வதேச சமூகம் கிடைக்கும் அனைத்து வழிகளிலும் இந்த நிலைமைக்கு பதிலளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
உளவு அமைப்பின் கூற்றுப்படி, 1,500 வடகொரிய துருப்புக்கள் ஏற்கனவே ரஷ்யாவிற்கு வந்துள்ளன மேலும் 10ஆயிரம் பேர் விரைவில் வரவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உக்ரைனின் பொல்டாவா பகுதியில் வடகொரியாவின் ஏவுகணை ஒன்று மீட்கப்பட்டதன் மூலம், இந்தப்போரில், வடகொரியா, ரஷ்யாவிற்கு வெடிமருந்துகளை வழங்குகிறது என்பதற்கான ஆதாரங்கள் அதிகரித்துள்ள நிலையில் தற்போதைய செய்தியும் வெளியாகியுள்ளது.
மொஸ்கோவும், பியோங்யாங்கும் அண்மைய மாதங்களில் தங்கள் ஒத்துழைப்பை ஆழப்படுத்தி வருகின்றன. கடந்த வாரம், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் பிறந்தநாளில், அவரை தமது நெருங்கிய தோழர் என்று வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் அழைத்தமை பேசு பொருளாக மாறியிருந்தது.
Comments are closed.