ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ஊரடங்கு சட்டத்தை நடைமுறைப்படுத்த நேர்ந்தால், ஜனாதிபதியின் ஆலோசனைக்கமையவே அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ (Nihal Thalduwa) தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு சட்டம் தொடர்பில் ஜனாதிபதியே தீர்மானிக்க முடியும் என்றும் காவல்துறையினருக்கோ பாதுகாப்பு பிரிவினருக்கோ அதுதொடர்பில் தீர்மானம் எடுக்க முடியாது என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
தேர்தல் முடிவுகள் எப்போதும் உத்தியோகபூர்வமான ஊடகங்களில் சரியான தகவல்களோடு வெளியிடப்படும். மாறாக சமூக ஊடகங்களில் வெளியாகும் தகவல்களின் அடிப்படையில் தகவல்களை பகிர வேண்டாம் என அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக நாடு முழுவதிலும் 63,000ற்கும் மேற்பட்ட காவல்துறையினர் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக நிஹால் தல்துவ (Nihal Taltuwa) தெரிவித்துள்ளார்.
மேலும், வீதிகளில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காவலரண்களில் 3,250 விசேட அதிரடிப்படையினர் கடமையில் ஈடுபடவுள்ளனர்.
எந்தவொரு சந்தர்ப்பத்திலாவது தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் ஒன்று கூடல்களை நடத்துவது மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை பேச்சாளர் நிஹால் தல்துவ குறிப்பிட்டுள்ளார்.
Comments are closed.