இன்னும் ஐந்து வருடங்களுக்கு நாடு ரணிலுடன் முன்னோக்கிச் செல்ல வேண்டும்: சாகல எடுத்துரைப்பு

9

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இன்னும் ஐந்து வருடங்களுக்கு இந்த நாடு முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

“கோவிட் காலத்தில் அப்போதைய அரசு வரிச் சுமைகளைக் குறைத்தமையின் காரணமாகவே இலங்கை நெருக்கடிக்குள் சிக்கியது.

அதேபோல் இரசாயன உர இறக்குமதிக்குத் தடை விதித்தமையினால் இலங்கையின் விவசாய உற்பத்திகள் முற்றாகச் சரிவைக் கண்டன.

அதனால் புதிய வகையிலான விளைச்சல்களை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளும் பாதிப்பை எதிர்கொண்டன.

அந்த நிலையிலிருந்து மீளவே நாம் சர்வதேச நாணய நிதியத்துடன் பயணிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதனாலேயே நாட்டின் அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடுகளிலிருந்து மீண்டு வர முடிந்தது.

குறிப்பாக சர்வதேச நாடுகள் மத்தியில் இலங்கை மீதான நம்பிக்கை ஏற்பட்டது. அதனால் சுற்றுலாத்துறையும் மூச்சுவிட ஆரம்பித்தது.

அதனால் அப்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் மேற்கொள்ளப்பட்ட நிதி முகாமைத்துவம் உள்ளிட்டச் செயற்பாடுகள் தேசிய பொருளாதாரத்தை நிலைப்படுத்தியிருந்தது.

அதன்படி இப்போது துரித அபிவிருத்திக்கான வேலைத்திட்டம் அவசியப்படுகின்றது. இந்த வருடத்தின் இறுதியில் சுற்றுலாப் பயணிகள் வருகையை 25 இலட்சமாக அதிகரிப்பதற்கான வேலைத்திட்டத்தை ஜனாதிபதி தயாரித்திருக்கின்றார்.

அதேபோல் எமது இறக்குமதிகளுக்குச் செலுத்தவே வருமானம் போதுமாக இருப்பதால் ஏற்றுமதி பொருளாதாரத்தை உருவாக்கி அதிக வருமானத்தை ஈட்டும் திட்டங்களையும் அவர் தயார்படுத்தியுள்ளார்.

தற்போதும் இலங்கை பல நாடுகளுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களில் கைசாத்திட்டுள்ளது. மேலும் மீள் புதுப்பிக்கக்கூடிய வலுசக்தி உற்பத்தியை ஆரம்பித்துள்ளோம்” என்றார்.

Comments are closed.