நல்லாட்சி அரசாங்கம் செய்த தவறே கோட்டாபயவின் பதவி விலகலுக்கு காரணம் : நாமல் பகிரங்கம்

11

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியிலிருந்து விலகுவதற்கு முன்னர், அவரின் கீழான அரசாங்கம் எரிபொருள் மற்றும் எரிவாயு வரிசைகளை நிறுத்துவதற்கும் மின்சாரத் தடைகளை நிறுத்துவதற்கும்,அரசாங்கம் போதிய நிதி மற்றும் நடவடிக்கைகளை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச அவிசாவளையில் இடம்பெற்ற தனது தேர்தல் பிரசாரத்தின் போது இதனை தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகுவதற்கு பல காரணங்கள் இருந்தன.

உமா ஓயா நீர்மின்சார திட்டம் மற்றும் சம்பூர் மின் உற்பத்தி நிலையம் என்பன நல்லாட்சி அரசாங்கத்தினால் குறித்த காலத்தில் பூர்த்தி செய்யப்பட்டிருந்தால், கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது என்று நாமல் குறிப்பிட்டார்.

நல்லாட்சி அரசாங்கம் இந்த திட்டங்களை வேண்டுமென்றே ஒத்திவைத்தது, இறுதியில் அந்த பழி கோட்டாபயவின் நிர்வாகத்தின் மீது விழுந்தது.

இந்தநிலையில் பங்களாதேஷ் பிரதமருக்கு ஏற்பட்ட கதியே கோட்டாபய ராஜபக்சவுக்கும் ஏற்பட்டுள்ளதாக நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.

பொதுஜன பெரமுன தலைவர்களை வெளியேற்ற சதி மேற்கொள்ளப்பட்டது, அதில் கோட்டாபய அரசாங்கம் சிக்கியது.

பெரும்பாலான ஆலோசகர்கள் தேசியவாதத்தை கைவிடவேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

தேர்தல் முறைமையை பாதுகாக்கும் வகையில் செயற்படும் அதேவேளை 13வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுமாறும் அவர்கள் ஆலோசனை வழங்கினர்.

எனினும் இறுதியில், நாட்டை மேலும் பிளவுபடுத்தாத ஒரு அரசியல் சக்தியை ஸ்தாபிப்பதற்கான தீர்மானம் எட்டப்பட்டது என்று நாமல் தெரிவித்தார்.

இதன்போது வடமாகாணத்திற்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் வழங்கப்பட மாட்டாது என்ற தீர்மானம் எட்டப்பட்டது.

அத்துடன் அரசியல் ஆதாயத்திற்காக இன ஒற்றுமையை ஏற்படுத்துவதில் தமது அரசாங்கம் ஆர்வம் காட்டவில்லை என்றும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.