குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு பல சலுகைகளை அறிவிக்கும் சஜித்

10

வறுமை நிலையில் உள்ள ஒவ்வொரு குடும்பங்களிற்கும் தலா 20 ஆயிரம் ரூபாய் இரண்டு வருடங்களுக்கு வழங்கப்படும். அரச உத்தியோகத்தர்களின் குறைந்தபட்ச ஊதியமாக 57,500 ரூபா மாற்றப்படும் என ஐக்கிய மக்கள்  ஜனாதிபதி வேட்பாளர் சஜித்பிரேமதாச தெரிவித்தார்.

வவுனியாவில் நேற்றையதினம் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

அரச உழியர்கள் இந்த அரசாங்கத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள். எனது ஆட்சியில் அவர்களுக்கு 25 வீத சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்படும். தற்போது அவர்களுக்கு வழங்கப்படுகின்ற கொடுப்பனவு 25 ஆயிரமாக அதிகரிக்கப்படும். குறைந்தபட்ச ஊதியமாக 57,500 ரூபா மாற்றப்படும்.

அரச ஊழியர்கள் இந்த நாட்டின் சொத்து. அரச சேவையின் தரம் விருத்தி செய்யப்பட வேண்டும். உங்களுடைய ஒத்துழைப்பை எங்களுக்கு தாருங்கள். எதிர்வரும் ஜனவரி மாதத்தில் இருந்து உங்களின் சகல பிரச்சனைகளையும் தீர்ப்பதற்கான நடவடிக்கையினை நாம் எடுப்போம்.

அத்துடன் இந்த வவுனியா பிரதேசத்தில் வாழ்கின்ற கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தினை எனது அரசு மேம்படுத்தும். பல்துறைகளிலும் அபிவிருத்தியடைந்த இடமாக இதனை மாற்றுவதற்கான நடவடிக்கையினை நிச்சயமாக எடுப்பேன்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அரசியல் சதி செய்து என்னை தோற்கடித்தார்கள். என்னால் முன்னெடுக்கப்பட்ட வீட்டுத்திட்டங்கள் அனைத்தும் கோட்டாபய அரசாங்கத்தினால் நிறுத்தப்பட்டது. எனவே எனது ஆட்சியில் நிறுத்தப்பட்ட அனைத்து வீட்டு வேலைத்திட்டங்களும் நிச்சயமாக முழுமையாக வழங்கப்படும்.

அத்தோடு நாட்டின் வறுமை நிலையினை குறைக்க வேண்டும். சேமிப்பு, முதலீடு, நுகர்வு, உற்பத்தி, ஏற்றுமதி இவற்றினை மையப்படுத்தி வறுமை நிலையில் உள்ள ஒவ்வொரு குடும்பங்களிற்கும் தலா 20 ஆயிரம் ரூபாய் இரண்டு வருடங்களுக்கு வழங்கப்படும். இதன்மூலம் சுயபொருளாதாரத்தினை வளர்ச்சியடைய செய்யவேண்டும்.

இந்த நிலையான வேலைத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவேன். கல்வித்துறை, சுகாதாரத்துறை, விவசாயத்துறை ஆகியன எனது ஆட்சியில் மேம்படுத்தப்படும். மகாவலி ஏ வலயம் அபிவிருத்தி செய்யப்படும். விவசாயக்கடன்கள் அனைத்தும் நீக்கப்படும்.

புதிய உபகரணங்கள் விவசாயிகளிற்கு வழங்கப்பட்டு விவசாயத்தில் புதிய முறைமை ஒன்று உருவாக்கப்படும். வவுனியாவில் இளைஞர்களின் தொழில் வாய்ப்பினை கருத்தில் கொண்டு கைத்தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டு வேலைவாய்ப்பு பிரச்சனைகள் தீர்க்கப்படும்.

இந்த அரசாங்கத்தினால் ஒரு கடவுச்சீட்டை கூட சீராக வழங்க முடியாதிருக்கின்றது. இந்த நிலமையில் அவர்களால் எவ்வாறு தொழிற்சாலைகளை வழங்க முடியும். தொழிற்சாலைகளை எரித்து அழித்தவர்கள் எவ்வாறு அதனை நிறுவித்தருவார்கள். எனவே நீங்கள் நன்றாக சிந்தியுங்கள்.

ஐக்கிய மக்கள் கூட்டணி சிறப்பான அணியினை கொண்டது. நாட்டை சிறப்பாக வழி நடத்தக்கூடிய சிறந்த அணி எம்மிடம் உள்ளது. போர் நிறைவுற்ற பின்னர் சர்வதேச ஒத்துழைப்பு மாநாடு ஒன்றை இந்த ஆட்சியாளர்களால் நடத்த முடியாமல் உள்ளது.

இது பற்றி அவர்கள் சிந்தித்தார்களா? எதிர்காலத்தில் வடக்கு – கிழக்கு மாகாணங்களை அடிப்படையாக வைத்து சர்வதேச கொடையாளர் மாநாடு ஒன்றை நடத்தி இந்த மாகாணங்களை அபிவிருத்தி செய்ய முயற்சிகளை எடுப்பேன். எனவே எதிர்வரும் காலத்தில் அபிவிருத்தி புரட்சியோடு நாம் உங்களை சந்திப்போம் என குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.