பாகிஸ்தானில் இடம்பெற்ற தாக்குதல்கள், பதில் தாக்குதல்களில் 60க்கும் மேற்பட்டவர்கள் பலி

12

பாகிஸ்தானின் (Pakistan) அமைதியற்ற மாகாணமாக கருதப்படும் பலுசிஸ்தானில் (Balochistan) உள்ள காவல் நிலையங்கள், தொடருந்து பாதைகள் மற்றும் நெடுஞ்சாலைகள் மீது பிரிவினைவாத தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்கள் மற்றும் பாதுகாப்புப் படையினரின் பதிலடி தாக்குதல்களில் 60க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதல்கள் நேற்று (27.08.2024) நடத்தப்பட்டுள்ளன. பல ஆண்டுகளாக இந்த மாகாணத்தில் பிரிவினைவாதிகள் நடத்தி வரும் தாக்குதல்களின் தொடர்ச்சியாகவே நேற்றைய தாக்குதல்களும் நடத்தப்பட்டுள்ளன.

ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் நடந்த தாக்குதல்களுக்குப் பிறகு பாதுகாப்புப் படையினர் 12 தீவிரவாதிகளை சுட்டுக்கொன்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக பெரிய நெடுஞ்சாலையில் பேருந்துகள் முதல் சரக்கு பாரவூர்திகள் வரை வாகனங்களை குறிவைத்து நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல்களின்போது, இடம்பெற்ற சண்டையில் 14 படையினரும், பொலிஸாரும், 21 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலில் குறைந்தது 23 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், 35 வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டதாகவும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், தொடருந்து பாலத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட இடத்திற்கு அருகில் இதுவரை அடையாளம் காணப்படாத 6 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன

போராளிக் குழுவான பலூச் விடுதலை இராணுவம் இந்த தாக்குதல்களுக்கு பொறுப்பேற்றுள்ளது.

பலுசிஸ்தானின் எரிவாயு மற்றும் கனிம வளங்களை நியாயமற்ற முறையில் சுரண்டுவதாகக் கூறி பல தசாப்தங்களாக மத்திய அரசாங்கத்துடன் போரிட்டு வரும், பிரிவினைவாதிகள், மாகாணத்தில் இருந்து சீனாவை வெளியேற்றி மாகாணத்திற்கு சுதந்திரத்தை கோரி வருகிறது.  

Comments are closed.