தனியார் வகுப்பிற்கு சென்ற மூன்று மாணவர்களை காணவில்லை : பதற்றத்தில் பெற்றோர்

16

கம்பகா (Gampaha)யக்கல பிரதேசத்தில் தனியார் வகுப்பிற்குச் சென்ற 14 வயதுடைய மூன்று மாணவர்கள் நேற்று (29) மாலை முதல் காணாமல் போயுள்ளதாக யக்கல மற்றும் வீரகுல காவல்துறையினர் தெரிவித்தனர்.

யக்கல காவல்துறையினருக்கு இது தொடர்பில் ஒரு முறைப்பாடு கிடைத்ததுடன் மற்றைய இரண்டு முறைப்பாடுகள் வீரகுல காவல்துறைக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.

மாணவர்களின் தாய்மார்களே இந்த முறைப்பாடுகளை செய்துள்ளதாக பிரதேசத்தின் சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

காணாமல் போன மூன்று மாணவர்களும் கம்பகா யக்கல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 9ஆம் ஆண்டில் கல்வி கற்கும் நண்பர்கள் எனவும், இவர்கள் மூவரும் நேற்று (29) இரவு வரை வீட்டுக்கு வரவில்லை எனவும் சிரேஷ்ட காவல்துறை அதிகாரி மேலும் தெரிவித்தார்.

காணாமற்போன மூன்று மாணவர்கள் தொடர்பில் இன்று (30) வரை எவ்வித தகவலும் தமக்கு கிடைக்கவில்லை என யக்கல மற்றும் வீரகுல காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பான விசாரணைகளை யக்கல மற்றும் வீரகுல காவல் பிரிவின் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் அதிகாரிகள் மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments are closed.