எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அஞ்சல் மூலம் வாக்களிக்கவிருப்போர் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அனைத்து மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்கள், மாவட்ட செயலாளர்கள், குறிப்பாக கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் உள்ளிட்ட அனைத்து மாவட்ட பிரதி, உதவித் தேர்தல்கள் ஆணையாளர்களுக்கும் இந்த சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, செல்லுபடியான ஆளடையாள அட்டையொன்றை சமர்ப்பிக்காத எவரொவருக்கும் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்கப்பட மாட்டாது.
அதேவேளை, அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கு தேசிய அடையாள அட்டை, செல்லுபடியான சாரதி அனுமதிப்பத்திரம், செல்லுபடியான கடவுச்சீட்டு, தேசிய அடையாள அட்டைக்குப் பதிலாக ஆட்பதிவு திணைக்களத்தினால் விநியோகிக்கப்படுகின்ற தகவல்களை உறுதிசெய்யும் கடிதம், தேர்தல் ஆணைக்குழுவினால் விநியோகிக்கப்படுகின்ற தற்காலிக அடையாள அட்டை ஆகிய ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆளடையாள அட்டைகளை சமர்ப்பித்து ஆளடையாளத்தை உறுதிசெய்ய வேண்டும்.
மேலும், குறித்த ஆவணங்களில் ஏதேனுமோர் அடையாள அட்டை அல்லது தேசிய அடையாள அட்டை இலக்கம் குறிப்பிடப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை இல்லாத எவரும் தனது ஆளடையாளத்தை உறுதிசெய்ய முடியாது என்பதால் அவர் வாக்காளர் ஒருவராக கருதப்பட மாட்டார்.
கடந்த தேர்தல்களின் பின்னர் அஞ்சல் மூலம் வாக்களிப்பு தொடர்பில் தெரியவந்த விடயங்களைக் கருத்திற்கொண்டு இவ்வாண்டு தேர்தலில் அஞ்சல் மூல வாக்களிப்பு முறையில் சில நிபந்தனைகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
இதேவேவளை குறிப்பிட்ட இந்த அடைளயாள அட்டை இல்லாத ஒருவர் அலுவலக அடையாள அட்டையை மாத்திரமே வைத்து கொண்டு அஞ்சல் மூல வாக்களிப்புக்கு வருவாரானால் அவரின் அலுவலக அடையாள அட்டையில் தேசிய அடையாள அட்டை இலக்கங்கள் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
அத்துடன், தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள உயர் அதிகாரி ஒருவரின் ஒப்புதல் இருக்க வேண்டும்.
அவ்வாறில்லாத சந்தர்ப்பங்களில், அலுவலக அடையாள அட்டைக்கு அஞ்சல் வாக்குச் சீட்டுக்களை அடையாளமிடுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Comments are closed.