யாழ்ப்பாணம் (Jaffna) – நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட இந்திய கடற்றொழிலாளர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்படை வீரரின் மரணம் தொடர்பான வழக்கில் கைதான பத்து இந்திய கடற்றொழிலாளர்களையும் எதிர்வரும் ஜுலை 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்று (25) அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட இந்திய கடற்றொழிலாளர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்ட போது ஏற்பட்ட விபத்தில், கடற்படை வீரர் உயிரிழந்தார்.
இதன்போது, 10 இந்திய கடற்றொழிலாளர்களுடன் ஒரு படகும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
இந்நிலையில், கடற்படையினரால் கைது செய்யப்பட்ட10 பேரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் சட்ட நடவடிக்கைக்காக காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
மேலும், அவர்களின் படகும் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு வரப்பட்டு பொலிஸாரிடம் பாரப்படுத்தப்பட்டது.
அதேவேளை, கைதான இந்திய கடற்றொழிலாளர்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் மல்லாகம் நீதிவான் முன்னிலையில் நேற்று முற்படுத்தப்பட்டுள்ளனர்.
இதன்போது, இலங்கை கடற்பரப்பில் அத்துமீறியமை மற்றும் ஆபத்தான விதத்தில் படகை செலுத்தி உயிரிழப்பை ஏற்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய, விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் வழக்கை எதிர்வரும் ஜீலை 8ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.
மேலும், இந்திய கடற்றொழிலாளர்கள் அத்துமீறி இலங்கை கடற்பரப்பில் நுழையும் போது கைது செய்யப்பட்டால் கடற்றொழில் நீரியல் வள திணைக்களம் ஊடாக நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவதே வழமை.
இருப்பினும், குறித்த சம்பவத்தில் உயிரிழப்பு ஏற்பட்டதால் நேரடியாக பொலிஸார் மூலம் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Comments are closed.