ஹிஜாபை தடை செய்த இஸ்லாமிய பெரும்பான்மை நாடு! மீறினால் லட்சங்களில் அபராதம்

16

இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் தஜிகிஸ்தானில் ஹிஜாப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, ஈத் பண்டிகையன்று குழந்தைகளுக்கு பணம் வழங்கப்படும் eidiyah (idi) வழக்கமும் நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளது.

தஜிகிஸ்தான் ஜனாதிபதி எமோமாலி ரஹ்மான் (Emomali Rahmon) ஹிஜாப்பை “ஒரு அன்னிய ஆடை’ (an alien garment) என்று கூறி தடையை அறிவித்துள்ளார்.

இப்புதிய சட்டத்தை பின்பற்றாதவர்களுக்கு, ( இலங்கை பணமதிப்பில்) ரூ. 2.27 லட்சம் முதல், ரூ. 11.30 லட்சம் வரை அபராதம் விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது.

அதே சமயம், எந்த மத அதிகாரிகளும், அரசு அதிகாரிகளும் இந்த சட்டத்தை பின்பற்றவில்லை என்றால், அவருக்கு ரூ.15.50 முதல் ரூ. 16.50 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தஜிகிஸ்தானில் மதச்சார்பின்மையை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் இந்த நடவடிக்கைகளை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது..

அதேபோல், வீண் செலவுகளை தடுக்கவும், குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் கல்வியில் அதிக கவனம் செலுத்தவும் eidiyah வழக்கத்தை தடை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு மத கமிட்டி தலைவர் சுலேமான் தவ்லட்ஜோடா தெரிவித்தார்.

சுமார் 10 மில்லியன் மக்கள்தொகை கொண்ட தஜிகிஸ்தானில், 96 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் இஸ்லாத்தைப் பின்பற்றுகிறார்கள்.

தஜிகிஸ்தான் அரசின் இந்த முடிவுக்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்துள்ளது. மனித உரிமை அமைப்புகள் உட்பட முஸ்லிம்களுடன் தொடர்புடைய பல குழுக்கள் புதிய சட்டத்தை எதிர்த்துள்ளன.

தற்போது தஜிகிஸ்தானில் ஹிஜாபிற்கு எதிரான சட்டம் இயற்றப்பட்டாலும், நீண்ட காலமாக அந்நாட்டில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் தடை செய்யப்பட்டுள்ளது.

Comments are closed.