ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) மட்டக்களப்புக்கு விஜயம் செய்யவுள்ளதுடன் பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கேற்கவுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இன்று(22.06.2024) விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி புதிய மாவட்ட செயலக கட்டிட தொகுதியை திறந்துவைக்கவுள்ளதுடன் இரு தினங்கள் மட்டக்களப்பில் தங்கியிருந்து பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கேற்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஜனாதிபதியின் வருகை தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மேலும், எதிர்வரும் சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் மட்டக்களப்பில் தங்கவுள்ள ஜனாதிபதி விவசாயத்தினை விரிவாக்கம் செய்தல் அபிவிருத்தி செய்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல்கள் மற்றும் கள விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளதுடன் புதிய மாவட்ட செயலகத்தினையும் திறந்துவைக்கவுள்ளார்.
அதேபோன்று ஆசிரியர் நியமனங்களும், உறுமய காணி உறுதிப்பத்திரங்களும் வழங்கப்படவுள்ளதுடன் பல்வேறு வேலைத்திட்டங்கள் ஜனாதிபதியால் முன்னெடுக்கப்படவுள்ளன.
அத்துடன் இளைஞர் யுவதிகளையும் அவர் சந்திக்கவுள்ளதுடன் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.
குறித்த கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் உயர் அதிகாரிகள்,ஜனாதிபதி செயலக அதிகாரிகள்,பாதுகாப்பு தரப்பினர் என பல்வேறு தரப்பினரும் இதில் கலந்துகொண்டனர்.
Comments are closed.