தனது தந்தையின் ஓய்வூதியத்தை முறைகேடாகப் பெற்று வந்த நபரொருவரை பாணந்துறைப் பொலிசார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
நாரஹேன்பிட்ட பிரதேசத்தில் அமைந்துள்ள நில அளவையாளர் திணைக்களத்தில் பணியாற்றிய நபரொருவர், பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின் மரணித்துள்ளார்.
அவருக்கு உரித்தான ஓய்வூதியம், அவரது மரணத்தின் பின் மனைவிக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மரணித்தவரின் மகன், தன் தாயுடன் சேர்ந்து (மரணித்தவரின் மனைவி) இணைந்த வங்கிக் கணக்கு ஒன்றை ஆரம்பித்து தந்தையின் ஓய்வூதியத்தை அந்த வங்கிக் கணக்கின் ஊடாகப்பெற்று வந்துள்ளார்.
இதற்கிடையே மரணித்தவரின் மனைவியும் இறந்து தற்போதைக்கு ஒன்றரை வருடங்கள் கடந்துவிட்டநிலையில், அவரது மகன் தொடர்ந்தும் தந்தையின் ஓய்வூதியப் பணத்தை முறைகேடாகப் பெற்று வந்துள்ளார்.
இதுதொடர்பில் பாணந்துறை பிரதேச செயலகத்தில் இருந்து கிடைத்த முறைப்பாட்டைஅடுத்து சந்தேக நபர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.