நாட்டின் கல்விக் கொள்கை மாற்றத்திற்காக ‘கல்விச் சபை’ ஒன்றை அமைப்பதற்குத் தயாராகியுள்ளதாக பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
தேசிய கல்விக் கல்லூரியில் மீகொடயில் அமைந்துள்ள கல்வி தலைமைத்துவ அபிவிருத்தி மற்றும் முகாமைத்துவ பீடத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது, கல்வித் துறையில் தொழில் திறன் மற்றும் தரத்தை மேம்படுத்துதல் என்பனவே கல்விச் சபையை அமைக்கும் அடிப்படை நோக்கம் என்றும் அவர் கூறியுள்ளார்.
2026 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்ட புதிய கல்வி மறுசீரமைப்பில் அர்ப்பணிப்புடன் செயற்படக்கூடிய, சிறந்த இயலுமைமிக்க மற்றும் வளமானவர்களை உருவாக்குவது அவசியமாகும் என பிரதமர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், 2009 ஆம் ஆண்டில் கல்வி நிர்வாக சேவையில் இணைந்து கொண்ட அதிகாரிகள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர்.
இந்நிலையில் புதிய கல்வி அமைச்சர் ஹரிணியின் பதவியேற்பின் பின்னர் கல்வி துறையில் பல மாற்றங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய புதிய கல்வி சீர்திருத்தத்தின் கீழ் தரம் ஒன்று மற்றும் ஆறாம் பாடத்திட்டங்கள் மாத்திரம் முழுமையாக மாற்றப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய சீர்திருத்தங்களின் கீழ் ஏனைய தரங்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதுவும் இடம்பெறாது, ஆனால் 10ம் தர பாட முறைமை பகுதியளவில் மாற்றப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த மூன்று தரங்களிலும் புதிய கற்றல் மற்றும் கற்பித்தல் செயல்முறை 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து வகுப்பறைகளில் செயல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.