இலங்கையின் அண்மைய அரசியல் மற்றும் மனித உரிமைகள் முன்னேற்றங்களை மதிப்பிடும் கூட்டு அறிக்கையொன்று ஐக்கிய இராச்சியம் தலைமையிலான இலங்கை தொடர்பான முக்கிய குழுவால், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை நேற்று பேரவையின் 58வது அமர்வின் போது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய இராச்சியத்தைத் தவிர, கனடா(Canada), மலாவி, மொண்டினீக்ரோ மற்றும் வடக்கு மெசிடோனியா ஆகியவை சமர்ப்பிப்பில் பங்களித்தன.
இலங்கையின் அமைதியான தேர்தல்கள் மற்றும் கடந்த ஆண்டு சுமுகமான அதிகார மாற்றத்தை அறிக்கை பாராட்டியுள்ளது.
அத்துடன், தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகளை மதிப்பாய்வு செய்துள்ளது. புதிய இலங்கை அரசாங்கம் நான்கு மாதங்கள் மட்டுமே ஆட்சியில் உள்ளது. இந்த நிலையில், இலங்கை சவால்களை எதிர்கொள்வதை ஊக்குவிப்பதாக அறிக்கை கூறியுள்ளது.
இந்தநிலையில், நல்லிணக்கத்தில் அர்த்தமுள்ள முன்னேற்றத்தை அடைவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாடு, நிலத்தை திருப்பித் தருதல், வீதித் தடைகளை நீக்குதல் மற்றும் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள சமூகங்கள் கடந்த காலத்தை நினைவுகூரவும், அவர்களின் அன்புக்குரியவர்களை நினைவுகூரவும் அனுமதித்தல் உள்ளிட்ட எடுக்கப்பட்ட ஆரம்ப நடவடிக்கைகளை தாம் பாராட்டுவதாக இலங்கை தொடர்பான முக்கிய குழு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், அரசியலமைப்பின்படி அதிகாரப் பரவலாக்கலை செயல்படுத்துவதற்கும், ஆட்சி சீர்திருத்தங்களில் முன்னேற்றம் அடைவதற்கும் அரசாங்கம் கொண்டுள்ள உறுதிமொழிகளை இலங்கை தொடர்பான முக்கியக் குழு வரவேற்றுள்ளது.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை மாற்றுவதற்கான அரசாங்கத்தின் கூற்று தொடர்பில், கருத்துரைத்துள்ள குழு, எந்தவொரு புதிய சட்டமும் இலங்கையின் சர்வதேச கடமைகளுக்கு ஏற்ப இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளது.
அதேநேரம் குறித்த சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிப்பதை தாம் ஊக்குவிப்பதாகவும் இலங்கை தொடர்பான குழு கூறியுள்ளது.
மனித உரிமைகள் மற்றும் ஊழல் வழக்குகளில் முன்னேற்றம் அடைய அரசாங்கம் முயற்சிக்கும் நிலையில், எந்தவொரு விரிவான நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் செயல்முறையும் பாதிக்கப்பட்ட சமூகங்களின் ஆதரவைக் கொண்டு, சர்வதேச தரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.
இந்த நிலையில், இழப்பீடுகள் மற்றும் காணாமல் போனவர்களை மையமாகக் கொண்ட உள்நாட்டு நிறுவனங்களின் பணிகளையும் தாம் ஊக்குவிப்பதாக குழு தெரிவித்துள்ளது.