திட்டமிட்ட குற்றக் கும்பல் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்குப் பின்னணியில் இருந்ததாகக் கருதப்படும் இஷாரா செவ்வந்தி என்ற பெண்,தனது தோற்றத்தை மாற்றிக் கொண்டு நாட்டை விட்டுத் தப்பிச் செல்ல முயற்சிப்பதாக புலனாய்வு அமைப்புகளுக்குத் தகவல் கிடைத்துள்ளது.
திட்டமிட்ட குற்றக் கும்பல் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்குப் பின்னணியில் இருந்தவர் நீர்கொழும்பு, கட்டுவெல்லேகம, ஜெயா மாவத்தையைச் சேர்ந்த 25 வயதான பின்புர தேவகே இஷாரா செவ்வந்தி என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
கடந்த புதன்கிழமை புதுக்கடை நீதிமன்றத்தில் வைத்து, கணேமுல்ல சஞ்சீவ மீது இடம்பெற்ற துப்பாக்கி தாக்குதலுக்கு துப்பாக்கியை வழங்கியவர் குறித்த பெண் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கொலை நடந்த நாளில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
எனினும் கொலை நடந்து ஐந்து நாட்கள் கடந்தும், இதுவரை மூளையாக இருந்தவர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர் இதுவரை கைது செய்யப்படவில்லை.
எனினும், விசாரணை அதிகாரிகள் அவரைப் பற்றிய பல தகவல்களைக் கண்டுபிடித்துள்ளனர்.
அதன்படி, நேற்று, சிறப்புப் படையினர் சந்தேகத்திற்குரிய பெண் மறைந்திருந்த தெஹிவளையில் உள்ள ஒரு விடுதியை சோதனைசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.