பாதுகாப்புப் படைகளில் இருந்து தப்பியோடியவர்களை உடனடியாக கைது செய்யுமாறு பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துய்யகொந்தா (Sampath Thuyacontha) பணிப்புரை விடுத்துள்ளார்.
நாட்டில் இடம்பெற்றுவரும் குற்றச் செயல்கள் தொடர்பில் பாதுகாப்புச் சபை கூடி இன்று (24) காலை ஆராய்ந்தது.
இதற்கிடையில், பிப்ரவரி 22 அன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற சிறப்பு செய்தியாளர் சந்திப்பின் போது, ஆயுதப் பயிற்சி பெற்ற ஆயுதப்படை வீரர்கள் முப்படைகளை விட்டு வெளியேறி குற்றச் செயல்களில் ஈடுபடுவது அல்லது பாதாள உலகக் குற்றக் கும்பல்களில் சேருவது போன்ற போக்கு காணப்படுவதாக பாதுகாப்புச் செயலாளர் வெளிப்படுத்தியிருந்தார்.
மேலும், அத்தகைய நபர்களைக் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இராணுவம் மற்றும் பொலிஸ் ஆகிய இரண்டிலும் ஆயுதப் பயிற்சியுடன் வெளியேறுபவர்களைக் குறுகிய காலத்திற்குள் கண்டுபிடித்து கைது செய்யுமாறும் வலியுறுத்தியுள்ளார்.
குற்றவியல் குழுக்களுடன் இராணுவ வீரர்களும் தொடர்பு கொண்டுள்ளார்களா என்று ஒரு பத்திரிகையாளர் வினவியபோது, பொருளாதார சிக்கல்கள் மற்றும் போதைப்பொருள் பழக்கம் காரணமாக சில வீரர்கள் குற்றவாளிகளுடன் தொடர்பு வைத்திருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஒப்புக்கொண்டுள்ளார்.
எனினும், எதிர்காலத்தில் இதுபோன்ற இராணுவ வீரர்களை அடையாளம் கண்டு கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.