சஞ்சீவ கொலை சம்பவம்! இஷாரா செவ்வந்தி தொடர்பில் விசாரணைகளில் வெளியான தகவல்

0 5

கணேமுல்ல சஞ்சீவவின் கொலை சம்பவம் தொடர்பாக இதுவரை எட்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இதில் பிரதான சந்தேகநபராக தேடப்பட்டுவரும் இஷாரா செவ்வந்தி தொடர்பில் பல விடயங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சந்தேக நபர்களில் இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் மற்றும் இரண்டு முன்னாள் இராணுவ அதிகாரிகளும் அடங்குவதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் குற்றத்தைச் செய்த பிறகு, 19 மற்றும் 25 வயதுடைய இரண்டு சந்தேகநபர்கள், துப்பாக்கிச் சூடு நடத்தியவரையும்,  வழக்கறிஞர் வேடத்தில் இருந்த  இஷாரா செவ்வந்தியையும்  முச்சக்கர வண்டியில் ஏற்றிச் சென்றதற்காக கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நீர்கொழும்பில் உள்ள ஒரு தொலைத்தொடர்பு நிறுவனத்தில் பணிபுரியும் குறித்த சந்தேகநபர்கள் இதற்காக பயன்படுத்திய முச்சக்கர வண்டியானது, நிறுவனம் ஒன்றில் இருந்து வாடகை அடிப்படையில் எடுத்துச் செல்லப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் படி, துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு, கமாண்டோ சலிந்து என்ற சந்தேகநபர் கடோல்கெலே பகுதியில் இருந்து முச்சக்கர வண்டியில் ஏறி கொச்சிக்கடையில் உள்ள ரிதிவெல்ல பகுதிக்கு சென்றுள்ளார்.

இதன்போது  அவர் வைத்திருந்த பையானது முச்சக்கர வண்டியில் இருந்து வெளியே வீசப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

பின்னர், மற்றொரு முச்சக்கர வண்டியில் வந்த இஷாரா செவ்வந்தி என்ற சந்தேக நபருடன், வைக்கல பகுதிக்குச் சென்றதாக கூறப்படுகிறது.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர் வைக்கல தொடருந்து  நிலையம் அருகே இறங்கியதாகவும், இஷாரா செவ்வந்தி கொப்பரா சந்திபகுதியில் இறங்கியதாகவும் கூறப்படுகிறது.

மேலும், கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் கம்பஹாவைச் சேர்ந்த 22 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவர் துப்பாக்கிச் சூடு நடத்தியவரிடம் அதை ஒப்படைக்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் தப்பிச் செல்ல பயன்படுத்திய வானை வைத்திருந்ததற்காக அதுருகிரி பொலிஸை சேர்ந்த கான்ஸ்டபிள் ஹசித ரோஷன் (37) கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது வானில் காணப்பட்ட  ஒரு பற்றுச்சீட்டில் இருந்த தொலைபேசி எண்ணின் அடிப்படையில் அவர் கொட்டாவாவில் கைது செய்யப்பட்டார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட பொலிஸா் அதிகாரியின் கூற்றுப்படி, வான் தற்போது வெளிநாட்டில் இருக்கும் போதைப்பொருள் கடத்தல்காரரான ருவிந்த என்பவரால் அவருக்கு வழங்கப்பட்டது என்றும், மேலும் அவரது அறிவுறுத்தலின் பேரில் வானை துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டவரை ஏற்றிச் செல்ல வழங்கியதாகவும், கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து குறித்த பொலிஸ் அதிகாரியின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது, துப்பாக்கிகள்,  தோட்டாக்களும்,ஐஸ் போதைப்பொருள் படிந்த மின்னணு அளவுகோல் மற்றும் ஒரு கார்  கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த விசாரணைகளின்படி, தற்போது தலைமறைவாக உள்ள இஷாரா செவ்வந்தி என்ற சந்தேக நபர், கொலையில் தொடர்புடைய அனைவரையும் வாட்ஸ்அப் மூலம் வழிநடத்தியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இது தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதாக பொலிஸார் கூறியள்ளனர்.

மேலும், சந்தேக நபர்கள் கொழும்பு கூடுதல் நீதவான் திரு. ஹர்ஷன கெக்குனாவல முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், 48 மணி நேர தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் மேலும் விசாரணைக்காக அவர்களை தடுத்து வைக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.