ஜீவன் தொண்டமான் அரசாங்கத்திற்கு விடுத்துள்ள பகிரங்க சவால்!

0 2

ஜனாதிபதியோ யாராக இருந்தாலும் முடிந்தால் தோட்ட கம்பனிகளுடன் கலந்துரையாடி அடிப்படை சம்பளத்துக்கு ஒரு ரூபா அதிகரித்து காட்டுங்கள் என சவால் விடுகிறேன் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(22) இடம்பெற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுதிட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான ஐந்தாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,” வரவு செலவு திட்டத்தில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ருபா வழங்குவதாக ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார்.

நாங்கள் ஆட்சியில் இருந்தபோது அன்று 1700 ரூபா பெற்றுக்கொடுப்பதாக தெரிவித்தபோது ஜீவன் தொண்டமான் காட்டிக்கொடுத்துவிட்டார்.

நாங்கள் 2,138 ரூபா பெற்றுக்கொடுப்போம் என அன்று எதிர்க்கட்சியில் இருந்த அனைவரும் தெரிவித்தார்கள். இப்போது ஜனாதிபதி 1,700 ரூபா பெற்றுக்கொடுப்பதாக தெரிவித்தபோது அதற்கு ஜனாதிபதிக்கு பாராட்டு தெரிவிக்கின்றனர்.இது நியாயமா? என்னை பொருத்தவரை அது தனியார் துறை.

அவர்களுடன் இணக்கப்பாட்டுக்கு வந்தே இதனை மேற்கொள்ள வேண்டும். நாங்கள் தெரிவித்த 1,700ரூபா சம்பளம் 1,350 ரூபா அடிப்படை சம்பளமும் 350 ஊக்குவிப்பு கொடுப்பனவும் என்ற அடிப்படையிலாகும்.

ஆனால் ஜனாதிபதியோ யாராக இருந்தாலும் முடிந்தால் தோட்ட கம்பனிகளுடன் கலந்துரையாடி அடிப்படை சம்பளத்துக்கு ஒரு ரூபா அதிகரித்து காட்டுங்கள் என சவால் விடுகிறேன்.

இதேவேளை, காணி உரிமை வழங்காமல் மலையக மக்களுக்கு எத்தனை வீடுகளை அமைத்துக்கொடுத்தாலும் அவர்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கப்போவதில்லை. அதனால் அரசாங்கம் காணி உரிமை வழங்குவதாக தெரிவித்தால் வரவு, செலவு திட்டத்துக்கு ஆதரவாக வாக்களிப்பேன்.

பெருந்தோட்ட மக்கள்  இலங்கை பிரஜைகளாக நடத்தப்படுவதில்லை. மாறாக பெருந்தோட்ட கம்பனிகளில் பிரஜைகளாகவே நடத்தப்படுகின்றனர். அவர்களுக்கு என்ன பிரச்சினை இருந்தாலும் அதற்கு பெருந்தோட்ட முகாமையாளரே அதற்கு அனுமதி வழங்கவேண்டும். இதனை மாற்றியமையுங்கள்.

அதனால் கடந்த அரசாங்கத்தையோ என்னை திட்டுவதாலே மலையக மக்களின் வாழ்கையில் மாற்றம் ஏற்படப்போவதில்லை. அதனால் அவர்களின் விடயத்தில் நிலையான தீர்மானம் ஒன்றை எடுக்குமாறே தெரிவிக்கிறேன்.

அத்துடன் 1,800 மில்லியன் ரூபாவை கல்விக்கும் சுகாதாரத்துக்கும் ஒதுக்கினால் அங்கு பெரிய மாற்றம் வரும். அதனையும் விட நாங்கள் எதிர்பார்க்கின்ற மாற்றம் வரவேண்டு்ம் என்றால், மக்களுக்கு காணி உரிமை வழங்க வேண்டும், என்றாலும் காணி உரிமை பத்திரம் வழங்க நிதி ஒதுக்கி இருப்பதை இங்கு காணவில்லை.

அத்துடன் மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்காமல் எத்தனை வீடுகளை கட்டினாலும் அவர்களின் பிரச்சினை தீரப்போவதில்லை. அவர்களுக்கு என காணி உரிமை இருந்தால் அதனை வைத்துக்கொண்டு அவர்கள் கல்வி மற்றும் ஏனைய அனைத்து முன்னேற்ற நடவடிக்கைகளையும் மேற்கொள்வார்கள்.

இதனை நாங்கள் கெஞ்சிக்கேட்பதில்லை. உரிமையுடன் கேட்கிறோம். இந்த இடத்தில் நாங்கள் 200 வருடங்களாக இருக்கிறோம்.” என கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.