இன, மத முரண்பாடுகளின் அடையாளமாக மாறியுள்ள தையிட்டி விகாரை : வெளியான அறிக்கை

0 2

தமிழர்களுடைய நிலங்களை அபகரித்து நிற்கும் தையிட்டி விகாரை தொடர்பில் சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகம் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியக இயக்குநர் அருட்பணி. சூ. யே. ஜீவரட்ணம் நேற்று (20) கண்டன அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்..

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதத்தை பின்பற்றக்கூடியவர்கள் அதிகமாக வாழுகின்ற வட கிழக்கு மாகாணங்களில் யுத்தத்திற்கு பின்பு பல இந்து, கிறிஸ்தவ ஆலயங்களின் புனரமைப்பு, மீள்கட்டுமானப்பணிகள் மற்றும் அரச படைகளின் கட்டுப்பாட்டிற்கு கீழுள்ள ஆலய காணிகளை விடுவித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.

இந்த சூழ்நிலையில், பௌத்த மதத்தை பின்பற்றுகின்றவர்கள் இல்லாத இடங்களில் அரச அதிகாரப் படையினரின் அனுசரணையோடு அத்துமீறிய இன, மத முரண்பாடுகளை தோற்றுவிக்கும் வகையில் பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதை அவதானிக்க முடிகிறது.

அந்த வகையில் தையிட்டியில் மக்களுக்குரிய காணியில் சட்ட விரோதமான முறையில் அமைக்கப்பட்டு வரும் திஸ்ஸ விகாரை தொடர்பாக வடமாகாணத்தின் சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகம் கண்டனத்தை தெரிவித்து நிற்கின்றது.

இன மத சமத்துவத்தையும் மதங்களுக்கிடையிலான சகிப்புத்தன்மையையும் வளர்த்து பல்சமய கலாசாரத்தையும், நம்பிக்கையும் கொண்ட நாடாக கட்டியெழுப்பப்பட வேண்டிய இக்கால கட்டத்தில் அடக்குமுறையின் வடிவமாக, பொருத்தப்பாடற்ற, நீதிக்குப்புறம்பான, சட்டவிரோத கட்டுமானங்கள் மற்றும் தனியார் காணி அபகரிப்புக்கள் போன்றன முற்றாக நிறுத்தப்பட வேண்டும்.

அத்துடன் இன, மத நல்லிணக்கத்தை வளர்த்து சமத்துவ உணர்வை ஏற்படுத்தும் வகையில் அரசும் அரச அதிகாரத்தில் உள்ளவர்களும் செயற்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றோம்.

மேற்குறித்த விடயம், இதய சுத்தியோடும் பரந்துபட்ட எண்ணத்தோடும் கையாளப்பட்டு இன, மத முரண்பாட்டை மீண்டும் ஏற்படுத்தாத வண்ணம் நீதி நிலைநாட்டப்பட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற வேண்டுகோளையும் விடுக்கின்றோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.