மட்டக்களப்பு (Batticaloa) மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழை காரணமாக தாழ்நிலங்களும்,வயல் நிலங்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவு பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட, மண்டூர் கமநல சேவை நிலையத்திற்குட்பட்டு பெரும்போக வேளாண்மை செய்கையில் 6000 ஏக்கருக்கும் அதிகமாக பயிரிடப்பட்டுள்ளது.
அவற்குள் மண்டூர், வெல்லாவெளி, வேத்துச்சேனை, பாலையடிவட்டை, காக்காச்சிவட்டை, போன்ற பல்வேறு பகுதிகளில் காணப்படும் வயல் நிலங்கள் மழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
கடந்த வருடம் ஏற்பட்ட பெவெள்ளத்தினால் தாம் பாதிக்கப்பட்டு மீண்டௌ முடியாத நிலையில் இருக்கும் வேளையில் இவ்வருட ஆரம்பத்திலேயே அடுத்த வெள்ளமும் தம்மை அதிகம் பாதித்துள்ளதாகவும் விவசாயிகள் அங்கலாய்க்கின்றனர்.
நெல்லுக்கான உத்தரவாத விலையை இன்னும் நிர்ணயிக்காத நிலையில் தாம் எதிர்பார்த்த விழைச்சலை பெறுவதிலும் சிக்கல் நிலவுவதாகவும் விவசாயிகள் கவலை வெளியிடுகின்றனர்.
இதேவேளை மட்டக்களப்பு – கிரான் பிரதேச செயலக பிரிவின் புலிபாஞ்சகல் பாதையில் நீர்மட்டம் உயர்ந்து இருப்பதனால் அந்த பாதையின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன் மக்களின் போக்குவரத்துக்காக இயந்திர படகுகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
மேலும் மாவட்டத்தின் சில குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளமையால் ஆற்றினை அன்டியபிரதேசங்கள் மற்றும் தாழ்நிலப் பிரதேசங்களில் வாழும் மக்கள் அவதானத்துடன் இருப்பதுடன் கடல், ஆறு, குளம் போன்ற நீர் நிலைகளில் நீராடுவதை தவிர்ப்பதுடன் மீன்பிடி நடவடிக்கைகளில் மிக மிக அவதானத்துடன் இருக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவுருத்தியுள்ளது.