உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் நேரடியாகவோ மறைமுகமாகவோ தனக்கு எந்த சம்பந்தமும் இல்லை என முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்துள்ளார்.
களுவாஞ்சிகுடி (Kaluwanchikudy) நீதவான் நீதிமன்றத்தில் வழக்கொன்றில் இன்று(10.01.2025) முன்னிலையாகிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,“உலகத்திலே உச்ச பாதுகாப்பு கட்டமைப்புக்கு அதிக நிதியை செலவு செய்கின்ற அமெரிக்காவிலே ஐ.எஸ் தீவிரவாதிகளின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள்.
அதே போன்றுதான் எங்களுடைய நாட்டிலேயும் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் நடைபெற்றது.
அந்த தாக்குதலை காத்தான்குடியை சேர்ந்த இளைஞர்கள் திட்டமிட்டு நடத்தி இருந்தார்கள். அவர்கள் ஐ.எஸ் ஆதரவாளர்கள், இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளை அவர்கள் பிரதிநிதி துறப்படுத்துகின்றார்கள் அதனை அவர்களே ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.
அந்த சஹாரான் ஹாசிம் என்பவர்தான் அந்த மதத்திற்காக மரணிப்பதாகவும், அல்லாஹ்வின் கொள்கையை பின்பற்றி மரணிப்பதன் காரணமாக சொர்க்கத்துக்கு செல்வதாகவும், ஹாபீர்களின் காசோ, பணமோ, ஒத்துழைப்புக்கள் இல்லை என்றும் வாக்குமூலம் கொடுத்திருந்தார்கள்.
இதனை அறியாமல் இப்போது வந்திருக்கின்ற அரசாங்கம் குறிப்பாக புதிய ஜனாதிபதி அவர்கள் கிறிஸ்தவ மக்களுக்கு கொடுத்திருந்த வாக்குறுதிகள் அல்லது கிறித்துவ மக்களின் வாக்குகளை மையமாகக் கொண்டு இதை என்னோடு இருந்து பிரிந்து சென்ற அசாத் மௌலானா வெளிநாட்டுக்குச் சென்று அரசியல் தஞ்சம் கோருவதற்காக வழங்கிய வாக்கு மூலத்தை இணைத்து புதியதொரு நாடகத்தை அரங்கேற்றி இருந்தார்கள்.
இது நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கின்ற போது நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது.
அந்த நேரத்திலிருந்து ஜனாதிபதி அவர்கள் ஒரு இஸ்லாமிய குடிமகனாக இருந்த ஓய்வு பெற்ற இமாம் எனும் நீதி அரசரை அந்த விசாரணை குழுவின் தலைவராக நியமித்திருந்தார்.
அந்த குழுவினுடை பரிந்துரையிலேயே மிகவும் தெளிவாக குறிப்பிட்டிருந்த இவ்விடயம், உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் பிள்ளையானுக்கோ ஏனையவருக்கோ சம்பந்தம் இல்லாத விடயம் என தெளிவாக கோடிட்டு காட்டிருந்தது.
இருந்த போதிலும் புதிய அரசாங்கம் அதனை குற்றப் புலனாய்வுப் திணைக்களத்திடம் விசாரணைக்கு கொடுத்திருந்தது.
நான் அந்த விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கி இருந்தேன் வாக்குமூலம் வழங்கியிருக்கிறேன், அந்த வாக்குமூலத்தை வைத்து அவர்கள் என்ன செய்வார்கள் என்பது எனக்கு தெரியாது.
இந்த நிலையில், நான் நாட்டிலிருந்து தப்பிச்செல்வேன் என்ற அடிப்படையில் எனது கடவுச்சீட்டைகூட தடை செய்து வைத்திருக்கின்றார்கள்.
எனவே மக்களுக்கு நான் தெளிவாக கூறுகின்றேன் நான் இதிலே நேரடியாகவோ மறைமுகமாகவோ சம்பந்தபடாதவன்.
நான் ஒரு ஆயுதப் போராட்டத்தில் இருந்தேன், என்பதற்காக என் மீது கறைசாற்றுவதற்காக என்னுடைய பெயரை, அசிங்கப்படுத்துவதற்காக எங்களுடைய அரசியலை இல்லாமல் செய்வதற்காக, அரசாங்கமும் இன்னும் சிலரும் செயற்பட்டார்கள்.” என அவர் தெரிவித்துள்ளார்.