யாழ். நகர்ப் பகுதியில் அட்டூளியம் செய்த வன்முறை கும்பல் : அதிரடியாக நால்வர் கைது

0 3

யாழ்ப்பாண நகர் பகுதியில் இரவு வேளை முச்சக்கரவண்டியில் சாகசம் காட்டி வன்முறையில் ஈடுபட்டமை தொடர்பில்  சந்தேகத்தின் அடிப்படையில் நால்வர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அரியாலை மற்றும் பொம்மை வெளி பகுதியை சேர்ந்த நால்வர் யாழ்ப்பாணம் காவல்துறை புலனாய்வு பிரிவினரால், இன்றையதினம்  (02.01.2025) கைது செய்யப்பட்டனர்.

 இதன்போது, இரண்டு முச்சக்கர வண்டிகளும் அவர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணத்தில் (Jaffna) வன்முறைக் கும்பல் ஒன்று இளைஞர் ஒருவரை கீழே தள்ளிவிட்டு கொடூரமாக தாக்கும் காணொளி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 31ஆம் திகதி வருட இறுதிநாள் என்பதால் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் நிகழ்வுகள் நடைபெற்றன.

இவ்வாறு நிகழ்வுகளில் கலந்துகொண்ட பின்னர் யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில் அமைந்துள்ள தனியார் பேருந்து தரிப்பு நிலையத்திற்கு வந்த கும்பல் ஒன்று அங்கு அட்டகாசம் புரிந்துள்ளது.

அந்த கும்பலானது முச்சக்கர வண்டியின் ஒரு சில்லினை தூக்கி ஆபத்தான முறையில் வீதியின் குறுக்கு மறுக்காக ஓட்டியுள்ளது.

அதன்பின்னர் குறித்த கும்பல் இளைஞர் ஒருவர் மீது, தலைக்கவசம், கையில் உள்ள பொருட்கள், கை, கால் என்பவற்றை பயன்படுத்தி கொலைவெறித் தாக்குதல் மேற்கொண்டுள்ளது.

இதனால் அந்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதுடன் குறித்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பயத்தையும் தோற்றுவித்துள்ளது.

இச் சம்பவம் வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் வடக்கு மாகாண சிரேஷ்ட காவல்துறை மா அதிபர் தனபால ஆகியோரது கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மேலும் இச் சம்பவம் குறித்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.