சுனாமி பேரலையில் உயிரிழந்தவர்களின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (26) மன்னார் பிரதான பாலத்தடியில் முன்னெடுக்கப்பட்டது.
முன்னாள் மன்னார் பிரதேச சபை உறுப்பினர் லுஸ்ரின் மோகன்ராஜ் தலைமையில் குறித்த நினைவேந்தல் இடம்பெற்றது.
சுனாமியில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் இன்று காலை 10.25 மணியளவில் குறித்த கடற்கரை பகுதியில் தீபம் ஏற்றி மலர் தூவி உயிர் நீத்தவர்களுக்காக உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நினைவேந்தல் நிகழ்வில் சமூக செயற்பாட்டாளர் பெனடிற், ரொலோ இயக்கத்தின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் வசந்த், மன்னார் நகரசபை உறுப்பினர் இரட்ணசிங்கம் குமரேஸ், கடற்றொழிலாளர்கள்,வர்த்தகர்கள், பிரதேச சபை முன்னாள் உறுப்பினர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலர் இணைந்து சுடர் ஏற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதேவேளை சுனாமி பேரலை அனர்த்தம் ஏற்பட்டு 20 ஆவது வருட நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் (26) மன்னார் மாவட்டச் செயலகத்தில் முன்னெடுக்கப்பட்டது.
மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் மாவட்ட உதவி பணிப்பாளர் கே.திலீபன் தலைமையில் குறித்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
இதன் போது உயிரிழந்த மக்களை நினைவு கூர்ந்து தீபம் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் சர்வமத தலைவர்களின் பிரார்த்தனைகளும் நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் சர்வமத தலைவர்கள், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் மற்றும் திணைக்கள தலைவர்களும் கலந்து கொண்டு தீபம் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
சுனாமியினால் உயிர்நீர்த்தவர்களுக்கு புத்தளத்தில் 2 நிமிட மௌன அஞ்சலி மற்றும் ஆத்மா சாந்தி வேண்டி பிரார்த்தனை இடம்பெற்றது.
2004.12.2ஆம் திகதி ஏற்பட்ட சுனாமி பேரழிவால் உயிரிழந்தவர்களை நினைவுகூறி இன்று காலை புத்தளம் மாவட்ட செயலகத்தில் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
புத்தளம் மாவட்ட அரசாங்க அதிபர் எச்.எம்.எஸ்.பி ஹேரத் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் புத்தளம் மாவட்ட சர்வமதத் தலைவர்கள், புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அதிகாரிகள், முப்படையினர் கலந்து கொண்டனர்.
இதன்போது சுனாமி பேரழிவில் உயிரிழந்தவர்களுக்காக 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் ஆத்மா சாந்தி வேண்டி புத்தளம் மாவட்ட சர்வமதத் தலைவர்களினால் பிரார்த்தனையும் நிகழ்த்தப்பட்டது.
சுனாமி ஆழிப்பேரலையால் காவுகொள்ளப்பட்ட மக்களின் 20 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு முல்லைத்தீவு (Mullaitivu)- புதுக்குடியிருப்பில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
வன்னிகுறோஸ் மற்றும் சுனாமி நினைவேந்தல் அமைப்பின் ஏற்பாட்டில் இன்று (26) காலை 8.05 மணியளவில் நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது.
சுனாமியால் உயிர்நீத்த ஆயிரக்கணக்கானவர்களின் உடல்கள் புதைக்கப்பட்டுள்ள புதுக்குடியிருப்பு ஐயனார்கோவிலடி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவாலயத்தில் உயிரிழந்தவர்களிற்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன் பின்னர் பொது சுடர் ஏற்றப்பட்டதனை தொடர்ந்து ஏனையவர்கள் சுடர் ஏற்றியதுடன் நினைவு தூபிக்கு மலர்மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நினைவேந்தல் நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் (S. Sivamohan), முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், பொது அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
Comments are closed.