தமது பெயரைப் பயன்படுத்தி மோசடிகள் இடம்பெறுவதாக அமைச்சர் முறைப்பாடு

0 1

போலியான சமூக சேவை திட்டங்களுக்கு நிதி திரட்டுவதற்காக தம்மைப் போன்று ஆள்மாறாட்டம் செய்யும் ஒரு குழு ஒன்று குறித்து அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி குற்றப் புலனாய்வுத் துறையில் முறைப்பாட்டை செய்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு தகவல் அளித்த அமைச்சர், ஜப்பான், தென் கொரியா மற்றும் இங்கிலாந்தில் உள்ள தனது நண்பர்களை வட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்ட குறித்த குழுவினர், முதலில் சுமார் 16 வினாடிகள் நீடிக்கும் ஒரு தெளிவற்ற காணொளி அழைப்பை ஏற்படுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அவர்கள் தமது படம், குரல் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஏமாற்று வேலைகளில் அச்சமின்றி ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த மோசடியில் பல வங்கிக் கணக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

எனவே, இந்த மோசடிகளில் சிக்கிக்கொள்ளவேண்டாம் என்று வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களிடம் ஹந்துனெத்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

தாமோ அல்லது அரசாங்கமோ இந்த வழியில் நிதி கோருவதில்லை என்பதை அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதன் தொடர்ச்சியாக 2025 ஜனவரி 5ஆம் திகதியன்று திட்டமிடப்பட்டுள்ள ஒரு போலி ஸூம் விவாதத்துக்காக தனது கையொப்பம், அதிகாரப்பூர்வ நாடாளுமன்ற கடிதத்தலைப்பு மற்றும் முத்திரை என்பன போலியாக தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, இந்த மோசடிகளை செய்பவர்களுக்கு எதிராக முழுமையான விசாரணையை நடத்தி சட்டத்தை நடைமுறைபடுத்துமாறு அமைச்சர் குற்றப்புலனாய்வுத்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தநிலையில், இந்த மோசடி தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் அல்லது மோசடியில் பாதிக்கப்பட்டிருக்கக்கூடியவர்கள் தங்கள் அனுபவங்களை வெளியிடுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.